திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை பயன்படுத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர்
கொள்ளையிட்ட நிலையில் கைவிட்டுச் சென்ற சுமார் 5 லட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள் தொடர்பில் விசாரணைகளை நடத்தாது, அதனை பயன்படுத்தி வந்த பொலிஸ் உத்தியோகஸ்தரை கொஹூவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொஹூவளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்
கொஹூவளை பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மகரகமையில் உள்ள சிறப்பு அங்காடி ஒன்றுக்கு எதிரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை கடந்த ஜூன் மாதம் 11 ஆம் திகதி ஒருவர் கொள்ளையிட்டு சென்றுள்ளார்.
அதே இலக்கத்தகட்டுடன் அந்த மோட்டார் சைக்கிளை ஒருவர் ஓட்டிச் செல்வதை கண்டு, அவரை பின் தொடர்ந்து சென்று அவரை பற்றிய தகவல்களை தேடிய போது, அவர் கொஹூவளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர் என்பது தெரியவந்ததாக கூறி, ஒருவர் கொஹூவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜனக பிரியதர்ஷன விதானகேவிடம் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பாக மகரகமை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளதாக கொஹூவளை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டுக்கு அமைய இரகசியமான விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொறுப்பதிகாரி, பொலிஸ் உத்தியோகஸ்தர் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிளுக்கு எந்த பதிவு ஆவணங்கள் இல்லை என்பதும், அது அவருடையது இல்லை என்பதையும் உறுதிப்படுத்திக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரிடம் விசாரணை நடத்தியுள்ளார்.
திருடர்கள் வீதியில் கைவிட்டு சென்ற மோட்டார் சைக்கிள்
கல்கிஸ்சை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய காலத்தில் சீருடையில் வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளை வீதியில் கைவிட்டு இரண்டு பேர் தப்பிச் சென்றதாகவும் இதன் பின்னர் அந்த மோட்டார் சைக்கிளை தான் பயன்படுத்தி வந்தாகவும் பொலிஸ் உத்தியோகஸ்தர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
மோட்டார் சைக்கிளை வழக்கு பொருளாக பொலிஸ் பதிவேடுகளில் பதிவு செய்யாது, அதனை திருடிய நபர்கள் தொடர்பாகவும் மோட்டார் சைக்கிள் குற்றச் செயலுக்கு பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தாது, அதனை தனது பயன்பாட்டுக்கு வைத்துக்கொண்டமை தொடர்பில் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகஸ்தகர், கல்கிஸ்சை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது, மேற்கொண்ட ஒழுக்க விரோத செயல் காரணமாக மூன்று வாரங்களுக்கு முன்னர் கொஹூவளை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர் நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதுடன் கொஹூவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.