பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கோவிட் தொற்றால் உயிரிழப்பு
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவில் கடமையாற்றி வந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் விசாரணை பிரிவில் கடமையாற்றி வந்த ஹப்புத்தளை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் உணவு ஒவ்வாமை காரணமாக கடந்த 19ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
ஆனாலும் ஒவ்வாமை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும், இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலம் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நாளைய தினம் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.