மட்டக்களப்பில் முகக்கவசம் அணியாத பலர் பொலிஸாரினால் கண்டுபிடிப்பு
மட்டக்களப்பு நகரிற்குள் முகக்கவசம் அணியாமல் நடமாடிய பலர் பொலிஸாரினால் புதன்கிழமை மாலை (03) கண்டுபிடிக்கப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலையில் தொற்றுநோயிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் சுகாதார அமைச்சு பணிப்புரைக்கு அமைய பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்தும் நடவடிக்கையினை மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜி.ஏ.என்.லக்சிறிவிஜேசேன பணிப்புரைக்கு அமைய மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலைய சிறுகுற்றப்பிரிவு பொறுப்பதிகாரி சி.ஐ.விஜேவீர வழிகாட்டலின் கீழ் சிறு குற்றப்பிரிவு அதிகாரியும் பொதுமக்கள் தொடர்பாடல் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஜி.உதயகுமார் தலைமையில் முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்தும் அறிவுறுத்தல் நடவடிக்கைகள் மட்டக்களப்பு நகர் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது பொதுமக்கள் தொடர்பாடல் பொலிஸ் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் அன்புராஜ் ஆகியோருடனான பொலிஸ் உத்தியோகத்தர்களினால் முகக்கவசம் அணியாத பலர் அடையாளம் காணப்பட்டு அவர்களது விபரங்களும் பொலிஸாரினால் சேகரிக்கப்பட்டதுடன் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.