ஹட்டனில் பொலிஸார் தீவிர சோதனை: சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
ஹட்டன் - நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பல வாகனங்கள் பிடிக்கப்பட்டுள்ளதுடன், அலங்கார பொருட்கள் பயன்படுத்திய சாரதிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை நேற்று(09.02.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனை நடவடிக்கை
இதன்போது, நுவரெலியா தலைமை மோட்டார் வாகன பரிசோதகர் ஜாலிய பண்டார தலைமையில் கீழ் ஹட்டன் போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இந்தச் சோதனையில் ஹட்டன் மல்லியப்பு சந்தி வழியாக பிரதான வீதியூடாகப் பயணிக்கும் நீண்ட மற்றும் குறுகிய தூரப் பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் உட்பட 15 வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அதில், 2 தனியார் பேருந்துகள், 01 இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, 02 முச்சக்கர வண்டிகள், 02 லொரிகள் மற்றும் 02 எரிபொருள் போக்குவரத்து பவுசர்கள் உட்பட 10 வாகனங்களின் வருவாய் உரிமங்கள் மற்றும் வாகன ஆவணங்களை மோட்டார் வாகன ஆய்வாளரால் தடுத்து வைத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இந்நிலையில், வழங்கப்பட்டுள்ள 14 நாட்களுக்குள் வாகனங்களை சீர்செய்து நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பரிசோதகர் காரியாலயத்தில் உறுதிப்படுத்த வேண்டும்.
அதன் பின்னரே, தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகன வருவாய் பத்திரம் மற்றும் வாகன ஆவணங்களை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என வாகன உரிமையாளர்களுக்கு நுவாரெலியா மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பிரதான பரிசோதகர் ஜாலிய பண்டார அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், குறித்த நடவடிக்கையின் போது, பல்வேறு ஒலி நாடாக்கள், விட்டு விட்டு ஔிரக்கூடிய மின் குமிழ்கள் மற்றும் சட்டவிரோதமாக உதிரிப்பாகங்களை பொருத்திய வாகனங்கள் மற்றும் அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர் மற்றும் அதிக சத்தத்தை எழுப்பும் கருவிகள் தொடர்பிலும் பொது போக்குவரத்து வாகனங்களில் வீதி விபத்துகள் ஏற்படக்கூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ள அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களை அகற்றவும் சாரதிகள் எச்சரிக்ககைப்பட்டுள்ளனர்.

