மட்டக்களப்பில் இரவில் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்த பொலிஸார் - கைக்குழந்தையுடன் கைது செய்யப்பட்ட பெண்
மட்டக்களப்பு, கல்லடி திருச்செந்தூர் ஆலயத்திற்கு அருகிலுள்ள 3ஆம் குறுக்குவீதியில் அமைந்துள்ள வீடொன்றின் கதவை இரவு நேரத்தில் காத்தான்குடி பொலிஸார் அலவாங்கால் உடைத்து, குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டிருந்த பெண்ணையும் அவரது சகோதரரையும் கைது செய்து அழைத்துச் சென்றதாக குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த வீட்டில் வசித்து வந்த தாயார் ஒருவர், தனது மகளுக்கு திருமணம் செய்து கொடுத்த பின்னர், மகள், மருமகன் மற்றும் தனது இளைய மகனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
சொத்து பிரச்சினை
இந்நிலையில், தாயாருக்கும் மகளுக்கும் இடையில் சொத்து தொடர்பான பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் இரு தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதையடுத்து, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இரு தரப்பினரையும் பொலிஸார் அழைத்து விசாரணை மேற்கொண்டதுடன், எதிர்வரும் 27ஆம் திகதி மேலதிக விசாரணைக்காக இந்த விவகாரம் இணக்க சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதுவரை இரு தரப்பினரும் பிரச்சினைகளில் ஈடுபடக்கூடாது என பொலிஸார் அறிவுறுத்தி இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர்.
பொலிஸார் கைது நடவடிக்கை
எனினும், மகளின் குடும்பத்தினரையும் தனது மகனையும் வீட்டுக்குள் செல்லவிடாமல் தாயார் தடுத்ததாகவும், அதனை மீறி அவர்கள் வீட்டுக்குள் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, அவர்களை வீட்டிலிருந்து வெளியேற்றுமாறு தாயார் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 23ஆம் திகதி புதன்கிழமை இரவு சுமார் 8 மணியளவில் குறித்த வீட்டுக்கு சென்ற காத்தான்குடி பொலிஸார், வீட்டின் கதவை அலவாங்கால் உடைத்து உள்ளே நுழைந்ததாகவும், அப்போது குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டிருந்த பெண்ணையும் அவரது சகோதரரையும் கைது செய்து அழைத்துச் சென்றதாகவும் குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஒரே குடும்பத்துக்குள் ஏற்பட்ட சொத்து பிரச்சினை தொடர்பாக, இரவு நேரத்தில் கைக்குழந்தையுடன் இருந்த பெண்ணின் வீட்டுக் கதவை உடைத்து பொலிஸார் கைது நடவடிக்கை மேற்கொண்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri