இரண்டு ஆண்டுகால ஆட்சியில் மக்கள் வாழ்க்கையே இருள்மயம் - அநுர அரசைச் சாடும் மொட்டுக் கட்சி
அநுர அரசு நாட்டின் பொருளாதாரத்தில் புதிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் ஆட்சிக்கு வந்த போதிலும், கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் பொதுமக்களின் வாழ்க்கை தரத்தில் எவ்வித நேர்மறை மாற்றமும் ஏற்படவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "இந்த அரசு ஆட்சிக்கு வரும்போது முன்வைத்த “வளமான நாடு - அழகிய வாழ்க்கை” என்ற வாசகத்தை தற்போது அரசே முழுமையாக மறந்துவிட்டது.
பிரதான பொறுப்பு
மக்களின் வருமான வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் மற்றும் தாங்க முடியாத அளவுக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு போன்றவற்றால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் பொருளாதார நிலைமை பற்றிக் கூறும் போது அரசு முதன்மைக் கணக்கு இருப்பு மற்றும் வரவு - செலவுத் திட்ட உபரி ஆகிய இரு விடயங்களை மட்டுமே சந்தைப்படுத்தி வருகின்றது.
மக்களின் அன்றாட வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது குறித்து எத்தகைய உள்வாரி உரையாடல்களும் அரசுக்குள் இடம்பெறவில்லை. 2024 இல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் பிரதான பொறுப்புடன் ஆட்சிக்கு வந்த புதிய அரசு, முதலீட்டுத் துறை, ஏற்றுமதி இலக்குகளில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்துவதற்கான சட்ட மற்றும் பொருளாதார மறுசீரமைப்புகளைக் கண்டுகொள்ளவில்லை.
பொருளாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை விடுத்து, தமக்கு விருப்பமான சில அரச அதிகாரிகளின் அதிகாரங்களை அதிகரிக்கும் சட்டமூலங்களையும், அமைச்சர்களின் சொத்து மற்றும் கடன் விவரங்களை மறைப்பதற்கான சட்ட திருத்தங்களையுமே அரசு முன்னெடுத்து வருகின்றது.
முதல் இரண்டு ஆண்டுகளில் மக்களிடம் செல்வாக்கைப் பெறத் தவறிய இந்த அரசால் இனிவரும் காலங்களில் பிரபல்யமடைய முடியாது" என்றார்.