துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த லொக்கு பெட்டியின் சகோதரர்! பொலிஸார் வெளியிட்ட தகவல்
அஹுங்கல்ல - வெலிகந்த பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நபர் தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் விளக்கமறியலில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘லொக்கு பெட்டியின் சகோதரரான 35 வயதான சுகத் நுவன் குமார என்ற (பொடி பட்டி) அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது துப்பாக்கிச்சூட்டில் தலையில் பலத்த காயமடைந்த அவர் பலபிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம்
இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி இரவு அவரை சுட்டுக்கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் உயிர் தப்பியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொடி பட்டி மீது எந்த குற்றவியல் வழக்குகளும் இல்லை என்று பொலிஸ் மேலும் தெரிவித்துள்ளது.
மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணை
இதற்கமைய, எல்பிட்டிய பிரதேச சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் லக்கி ரந்தெனியாவின் மேற்பார்வையின் கீழ் மூன்று பொலிஸ் குழுக்களால் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், நேற்று இரவு நடந்த துப்பாக்கிச்சூட்டுடன் , இந்த ஆண்டில் இதுவரை 41 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றில் 23 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 21 பேர் காயமடைந்துள்ளனர்.