கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஹரினி
பிரதமர் ஹரினி அமரசூரிய இன்றைய தினம் (16.02.2025) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, அங்கு அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து, பிற்பகல் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச பொது அமைப்புகள் ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.
இதன்போது, விவசாயிகளும் நுகர்வோரும் பாதிக்காத வகையில் நெல்லுக்கான உத்தரவாத விலை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ”நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு - செலவுத் திட்டமானது நாட்டில் உள்ள சகலரும் பயனடைய கூடிய ஒரு வரவு - செலவு திட்டமாக அமைந்துள்ளது.
நெல்லுக்கான உத்தரவாத விலை
கல்வியை எடுத்துக் கொண்டால் தற்போது பாடசாலைகளில் வகுப்பறைகள் இல்லை ஆசிரியர் பற்றாக்குறை என பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. எதிர்காலத்தில் கல்வியை அபிவிருத்தி செய்ய பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த அரசாங்கமானது அண்மையில் நெல்லுக்கான உத்தரவாத விலையை வழங்கியுள்ளது. அதே நேரம் நுகர்வோர்களை பாதிக்காத வகையிலும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் இந்த நாட்டிலே விவசாயிகளும் நுகர்வோரும் பாதிக்காத வகையில் இந்த நெல்லுக்கான உத்தரவாத விலையும் வழங்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
முரசுமோட்டை ஊற்று விநாயகர் ஆலய முன்றலில் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி மக்கள் சந்திப்பில் கிராம மட்ட பொது அமைப்புகள் தேசிய மக்கள் சக்தியினுடைய மாவட்ட மற்றும் பிரதேச அமைப்பாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
மாணவர்களின் பிரச்சினைகள்
பிரதமர் ஹரினி, குறித்த தொழிற்பயிற்சி நிலையத்தின் தேவைகள் மற்றும் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டுள்ளார்.
அத்துடன், இந்த விஜயத்தின் போது வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், கரைச்சி பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
காணொளி - தவேந்திரன்













