பிரிட்டன் வெளிவிவகாரச் செயலருடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!
பிரிட்டனுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய, அந்நாட்டின் கல்விச் செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சனைச் சந்தித்து இருதரப்புக் கல்வி ஒத்துழைப்புகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் நீண்டகாலமாக நிலவி வரும் வரலாற்று ரீதியான உறவுகளை மேலும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது குறித்து இச்சந்திப்பில் முக்கிய அவதானம் செலுத்தப்பட்டது.
புதிய கல்வி வாய்ப்புகள்
இரு நாடுகளின் கல்வி நிறுவனங்களுக்கு இடையே வலுவான கூட்டுறவைப் பேணுதல், உயர்கல்வியின் தரத்தை சர்வதேச மட்டத்தில் உறுதிசெய்தல், மற்றும் மாணவர்கள் - கல்வியாளர்களுக்கான புதிய கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இரு தரப்பினரும் விரிவாக ஆராய்ந்தனர்.

மேலும், இரு நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பரிமாற்றத் திட்டங்கள், கூட்டு கல்வி வேலைத்திட்டங்கள் மற்றும் நவீன ஆராய்ச்சித் துறைகளில் புதிய கூட்டு முயற்சிகளை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
பிரிட்டன் அரசின் நிதியுதவியுடன் இலங்கையில் தற்போது வெற்றிகரமாக நடைமுறையிலுள்ள 'செவ்னிங்' புலமைப்பரிசில்கள் மற்றும் பொதுநலவாய புலமைப்பரிசில் திட்டங்களைப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இதன்போது வெகுவாகப் பாராட்டினார்.
நீண்டகால நட்புறவை மேலும் பலப்படுத்த
பிரிட்டனுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய, அந்நாட்டு வெளிவிவகாரச் செயலாளர் யுவெட் கூப்பரைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்துப் பலதரப்பட்ட கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.

இச்சந்திப்பின் போது இலங்கையின் தற்போதைய அரசியல், பொருளாதார மாற்றங்கள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
அண்மையில் இலங்கையைப் பாதித்த 'டித்வா' சூறாவளிப் பேரழிவைத் தொடர்ந்து, நாட்டின் மீள்கட்டுமானம் மற்றும் பொருளாதார மீட்சிப் பணிகளுக்காகப் பிரிட்டன் அரசு வழங்கி வரும் தொடர்ச்சியான நிதியுதவிகள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளுக்குப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இலங்கையின் சார்பாகத் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார வளர்ச்சிப் போக்குகள், புதிய அரசின் பிரதான கொள்கை முன்னுரிமைகள் குறித்துப் பிரிட்டன் இராஜதந்திரிகளுக்குப் பிரதமர் தெளிவுபடுத்தினார்.
இலங்கை மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் பலப்படுத்தும் நோக்கில் அமைந்த இராஜதந்திர மட்டத்திலான இச்சந்திப்பில், பிரிட்டனுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் சேனாதீர மற்றும் இலங்கைத் தூதரகத்தின் உயர் அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர்.

