பிரித்தானியாவில் யூதர்கள் குறி துப்பாக்கிச்சூடு திட்டம் முறியடிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை
மான்செஸ்டர் நகரில் யூத சமூகத்தினரைக் குறி வைத்து, பிரித்தானிய வரலாற்றிலேயே மிகவும் கொடூரமான துப்பாக்கிச் சூட்டை நடத்தத் திட்டமிட்ட இரண்டு ஐ.எஸ் ஆதரவாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய, 38 வயதான வாலித் சாதாவி (Walid Saadaoui) மற்றும் 52 வயதான அமர் உசேன் ஆகியோர் ஏகே-47 ரகத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கானோரைக் கொல்லச் சதி செய்ததாக ப்ரெஸ்டன் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இரகசிய உளவாளி
இதன் அடிப்படையில் குற்றம் செய்தவர்களுக்கு குறைந்தபட்சம் 37 மற்றும் 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

"இந்தத் திட்டம் நிறைவேறியிருந்தால், குழந்தைகள் உட்பட ஏராளமானோர் உயிரிழந்திருப்பார்கள்" என்று நீதிபதி வால் தனது தீர்ப்பில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சதியை முறியடிப்பதில் சிஐஏ (CIA) பாணியிலான இரகசிய உளவாளி ஒருவர் முக்கியப் பங்காற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிரடி கைது நடவடிக்கை
'பாரூக்' என்ற பெயரில் தீவிரவாதி போன்று நடித்த அந்த உளவாளியிடம், துப்பாக்கிகளை கடத்தி வருவது குறித்து சாதாவி பேசிய போது பொலிஸார் ஆதாரங்களைத் திரட்டியுள்ளனர்.

இதனையடுத்து, கடந்த 2024 மே மாதம் துப்பாக்கிகளைப் பெறச் சென்ற போது சாதாவி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்தச் சதி குறித்து தெரிந்திருந்தும் அதிகாரிகளிடம் மறைத்ததற்காக வாலித் சாதாவியின் தம்பி பிலால் சாதாவிக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் பாதுகாப்புப் படையினரின் இந்த அதிரடி நடவடிக்கை, பெரும் உயிர்ச் சேதத்தைத் தவிர்த்து யூத சமூகத்தினரிடையே நிலவிய அச்சத்தை இல்லாமலாக்கியுள்ளது.