சம்பள உயர்வு கொடுத்தும் பெருந்தோட்ட மக்கள் உண்ணாவிரத போராட்டம்: மூவர் வைத்தியசாலையில்..
நுவரெலியா- மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்தைச் சேர்ந்த சாமிமலை, கவரவில தோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் மூவர், இன்று(11.02.2026) காலை மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தோட்ட நிர்வாகத்தால் 8 தொழிலாளர்களின் சேவை இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தோட்டத்தில் பணியாற்றும் 8 தொழிலாளர்களின் சேவையைத் தோட்ட நிர்வாகம் இடைநிறுத்தியிருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கடந்த 7 நாட்களாகத் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமது கோரிக்கைகளுக்கு உரியத் தீர்வு கிடைக்காத காரணத்தினால், நேற்றைய தினம்(10.01.202) முதல் இவர்கள் தமது போராட்டத்தை உண்ணாவிரதப் போராட்டமாக முன்னெடுத்து வருகின்றனர்.
மூவர் வைத்தியசாலையில் அனுமதி
இந்நிலையில், உண்ணாவிரதத்தின் தாக்கம் காரணமாக இன்று காலை மூன்று தொழிலாளர்கள் திடீரென மயக்கமடைந்தனர். இதனையடுத்து, அவர்கள் உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தோட்டத்தில் பதிவு செய்யப்படாத வெளியாட்களைப் பயன்படுத்தித் தேயிலை பறிக்கும் பணிகளை மேற்கொள்ளத் தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இதற்குத் தோட்டத் தொழிலாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். நிர்வாகத்தின் இந்தத் தீர்மானத்தை எதிர்த்த காரணத்தினாலேயே, 8 தொழிலாளர்களின் சேவையும் தன்னிச்சையாக இடைநிறுத்தப்பட்டதாகத் தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
கடந்த 48 நாட்களாகத் தங்களின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் தாம் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தீர்வு வேண்டும்..
இந்த பிரச்சினை தொடர்பில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் தோட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த 8 தொழிலாளர்களையும் மீண்டும் பணிக்குத் திரும்புமாறு தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இருப்பினும், பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட கடந்த 48 நாட்களுக்கான நிலுவைச் சம்பளம் அல்லது அதற்கான உரிய நஷ்டஈடு தொடர்பில் நிர்வாகம் எந்த வித உறுதியான தீர்வுகளையும் வழங்கவில்லை எனத் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
"எங்களை மீண்டும் வேலையில் சேர்த்தால் மட்டும் போதாது, அநியாயமாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட நாட்களுக்கான உரிய தீர்வு வேண்டும்" என வலியுறுத்தித் தொழிலாளர்கள் தமது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri