மட்டக்களப்பில் விரைவில் திறக்கப்படவுள்ள ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகம்
ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகம் ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்தில் விரைவில் திறப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சுனில் ஹெந்துன்நெத்தி தெரிவித்தார்.
"மட்டக்களப்பு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி" நேற்று(01.10.2026) கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், இங்கு வருகை தந்துள்ள விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் தொழிற்துறை சார்ந்த அனைவருக்கும் இது ஒரு மிகச்சிறந்த சந்தர்ப்பமாக அமைகின்றது.
திட்டங்கள்
எமது விவசாயிகள் மற்றும் தொழிலதிபர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தங்களுக்குத் தேவையான உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்கான பல வாய்ப்புகள் இங்கு காணப்படுகின்றன.

எமது கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் ஊடாக இவ்வாறான தேசிய அளவிலான கண்காட்சிகளை நடத்துவதன் மூலம் தொழில்துறையின் வளர்ச்சிக்காக அதிகளவில் உதவ முடியும்.
இதன் ஒரு அங்கமாக, எமது ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகம் ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்தில் விரைவில் திறப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.