வறட்சியால் கருகிய அன்னாசிப் பயிர்கள்: நிர்க்கதியாகி நிற்கும் விவசாயி
தீவிர வறட்சி காரணமாக பல இலட்சம் ரூபாய் செலவில் பயிரிடப்பட்ட பயிர்கள் முற்றிலும் அழிந்துபோயுள்ள நிலையிலும், அதிகாரிகள் எவரும் தங்களைக் கண்டுகொள்ளவில்லை என ஹிங்குராக்கொட பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 31 சிங்ஹகம பகுதியைச் சேர்ந்த விவசாயியான ஏ.ஜி. திலகரத்ன பண்டார கவலை தெரிவித்துள்ளார்.
கூலி ஆட்களை அமர்த்திச் சுமார் 2 ஏக்கர் நிலப்பரப்பில் அன்னாசி மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றை இவர் பயிரிட்டுள்ளார்.
கடுமையான வறட்சி
இதற்காகச் சுமார் 4 முதல் 5 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகக் கூறும் இவர், நிலவும் கடுமையான வறட்சி மற்றும் கிணறுகளில் நீர் வற்றியதன் காரணமாகப் பயிர்கள் அனைத்தும் முற்றிலுமாக அழிந்துபோயுள்ளதாகத் தெரிவிக்கின்றார்.

இது குறித்துப் பகுதி கிராம உத்தியோகத்தருக்குத் தகவல் தெரிவித்தும், அவர் இதுவரை சேதமடைந்த பயிர்களை நேரில் வந்து பார்வையிடக்கூட இல்லை எனப் பாதிக்கப்பட்ட விவசாயி குற்றம் சாட்டுகின்றார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கிடைப்பதில்லை
அத்துடன், தகுதியற்றவர்களுக்கும் கைவிடப்பட்ட வீடுகளுக்கும் நிவாரண நிதி வழங்கப்படுவதாகவும், உண்மையில் பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளுக்கு எந்தவித உதவிகளும் கிடைப்பதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

மேலும், தமது பிரதேச செயலகப் பிரிவு 70 கி.மீ தொலைவில் உள்ள ஹிங்குரக்கொடயில் அமைந்துள்ளதால், சேவை தேவைகளுக்காக அங்கு சென்று வருவது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாகவும், எனவே தங்களை அருகிலுள்ள கந்தளாய் (சுமார் 18 கி.மீ) பிரிவுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தகுதியான அதிகாரிகளை நியமித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டிலிருந்து நள்ளிரவில் அவசரமாக வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச! ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் சிக்கல்