பிள்ளையானுக்கு தொடரும் நெருக்கடி! நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு...
மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும் ஒக்டோபர் 13ம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணாதுரை தர்ஷினி இன்று செவ்வாய்க்கிழமை (29 ) காணொளி ஊடாக பிறப்பித்தார்.
3 கொலை சம்பவங்கள்
2008ஆம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து ரி.எம்.வி.பி கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக் கொலைசெய்யப்பட்டனர்.

மற்றும் வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட ஏற்கனவே 2025ஆம் ஏப்ரல் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் காத்தான்குடியை சேர்ந்த இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரை கடந்த கடந்த 2025 நவம்பர் மாதம் சிஐடியினர் கைது செய்தனர்.
இந்த 5 முக்கிய மனிதக் கொலைகளுடன் தொடர்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான லண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த முகமட் பாய்ஸ், உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026 யூன் 17 ம் திகதி சிஐடியினர் வழக்கு தாக்கல் செய்தனர்.
நீதிமன்றின் உத்தரவு
அதனை தொடர்ந்து அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு இன்று செவ்வாய்க்கிழமை (29) திறந்த நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன் போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களான இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரை முன்னிலைப்படுத்தியதுடன் பிள்ளையானை காணொளி மூலம் முன்னிலைப்படுத்தினர்.
இதனை தொடர்ந்து பிள்ளையான் உட்பட 3 பேரையும் தொடர்ந்து எதிர்வரும் 13திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டு லண்டனில் உள்ள சந்தேக நபரான பொலிஸ் பாயிஸ் என்றழைக்கப்படும் முகமட் பாயிஸிற்கு பிடிவிறாந்து உத்தரவையும் நீதவான் பிறப்பித்துள்ளார்.