தாய்லாந்து பெளத்த தேரர்களின் பாத யாத்திரைக்கு சர்வ மதத் தலைவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு (Photos)
தாய்லாந்தைச் சேர்ந்த பெளத்த தேரர்களால் முன்னெடுக்கப்படவுள்ள பாத யாத்திரையில் கலந்துகொள்ளுமாறு இலங்கையிலுள்ள சர்வ மதத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (10.05.2023) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற பெளத்த தேரர்கள், சர்வமத தலைவர்கள், சிவில் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் துறைசார் அதிகாரிகளின் கலந்துரையாடலின்போதே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த யாத்திரை குறித்து தெரியவருவதாவது, தாய்லாந்து உபசம்பதா நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு 270 வருடப் பூர்த்தியை நினைவுகூறும் நோக்கில் எதிர்வரும் 14ஆம் திகதி திருகோணமலையிலிருந்து கண்டி நோக்கி நடைபெறும் பாத யாத்திரை நடைபெறவுள்ளது.
10 நாட்கள் தொடரும் யாத்திரை
இப்பாத யாத்திரையில் தாய்லாந்தைச் சேர்ந்த 50க்கு மேற்பட்ட பெளத்த தேரர்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தாகவும் இந் நிகழ்வு கருதப்படுகின்றது.
1753ஆம் ஆண்டு இலங்கையின் மன்னராக இருந்த கீர்த்தி சிறி இராஜசிங்க மன்னன் இலங்கையில் உபசம்பதா நிகழ்வை மீளக் கொண்டுவரும் நோக்கில் தாயலாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட பெளத்த தேரர்கள் (உபாலி தேரர் தலைமையிலான தூதுக்குழுவினர்) முதன் முதலில் தடம் பதித்த இடமாக திருகோணமலை காணப்படுகின்றது.
இவ்வாறு வந்த
தூதுக்குழுவினரை, மன்னனின் பிரதிநிதிகள் வரவேற்ற இடமாக
காணப்படுவது, நெல்சன் தியேட்டருக்கு முன்னால் அமைந்துள்ள 04 அரச மரங்கள் கொண்ட
தொல்லியல் இடமாகும்.
இந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூறும் வகையில் குறித்த இடத்தில் பிரித் (பெளத்த மத ஆசீர்வாதம்) நிகழ்வொன்று நடைபெற்ற பின்னர் தேரர்கள் அடங்கிய குழுவினர் பாத யாத்திரை மூலம் கண்டி நோக்கிப் புறப்படுவர். இப்பாத யாத்திரை 10 நாட்கள் கொண்டதாகும்.
போலியான தகவல்கள்
நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, பாத யாத்திரை நடைபெறும் நோக்கம் குறித்து திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் தெளிவாக எடுத்துரைத்ததுடன், குறித்த சர்வதேச நிகழ்வைச் சிறப்பாக நடாத்த ஒத்துழைப்பை வழங்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதன்போது, கலந்து கொண்ட சிறி பத்ரகாளி அம்மன் ஆலய பிரதம குருக்கள் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்கள் மற்றும் சிவிலமைப்பு பிரதிநிதிகளும் குறித்த நிகழ்வு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், அரசாங்க அதிபர் குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பையும் விடுத்துள்ளனர்.
போலியான தகவல்கள்
இருப்பினும் இந்நிகழ்வு தொடர்பில் ஒரு சிலர் போலியான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றதாக கூறப்படுகின்றது.
மேலும் குறித்த இடத்தில் பெளத்த சிலையை நிரந்தரமாக வைக்க திட்டம் தீட்டப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
இத் தகவல் குறித்து அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளதாவது, இடத்தில் பெளத்த சிலையோ வேறு நிர்மாணிப்புக்கலோ வைக்கப்பட போவதில்லை. சமய ஆசீர்வாதம் மாத்திரமே நடைபெறவுள்ளது. எனவே, மக்கள் போலி பரப்புரைகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.