தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை கோரி யாழில் மனு தாக்கல்
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை கோரி யாழ்ப்பாணம் பொலிஸாரால் யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபனின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளன.
இந்தநிலையில், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தத் தடை விதிக்கக் கோரி யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் நேற்று (13.09.2024) வெள்ளிக்கிழமை மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
வழக்குத் தாக்கல்
குறித்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறும் என்றும், அன்றைய தினம் மனுவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் மன்றில் முன்னிலையாக வேண்டும் என்றும் மன்று கட்டளையிட்டுள்ளது.
யாழ். நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் இடம்பெறும் நிகழ்வைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |