கதிர்காம யாத்திரைக்கு தேசிய அங்கீகாரம் கோரி மனு கையளிப்பு
இலங்கையில் இந்து மக்களின் புனித யாத்திரைகளில் முக்கியமான கதிர்காம யாத்திரையை, புனித யாத்திரையாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டம் நேற்று (11.04.2026) காரைதீவில் அமைந்துள்ள விபுலானந்தர் மணி மண்டபத்தில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை கூட்டம்
அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு. ஜெயராஜியின் ஒருங்கிணைப்பில், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றது. இதில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. அதிசயராஜ், காரைதீவு உதவி பிரதேச செயலாளர் பிரணவரூபன், திருக்கோவில் உதவி பிரதேச செயலாளர் ஆர். சுபாகர், ஆலையடிவேம்பு உதவி பிரதேச செயலாளர் மா. இராமக்குட்டி, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், அம்பாறை மாவட்ட இந்து ஆலயங்களின் பிரதிநிதிகள் மற்றும் இந்து சமய அமைப்புகளின் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
ஆலோசனை கூட்டத்தின் நோக்கம் தொடர்பில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன் விளக்கமளித்தார்.

கதிர்காம யாத்திரையை புனித யாத்திரையாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்துவதற்கான நடைமுறைகள் குறித்து அவர் தெளிவுபடுத்தினார்.
இதன் பின்னர் ஆலயத் தலைவர்கள் மற்றும் சமூக, சமய அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களது ஆதரவை வெளிப்படுத்தி கருத்துக்களை முன்வைத்தனர்.
மேலும், குறித்த விடயத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்து, வர்த்தமானி மூலம் புனித யாத்திரையாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மனுக்கள் கையளிப்பு
மேலும், ஆலயங்கள் மற்றும் சமூக அமைப்புகளின் சார்பில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளருக்கு சமர்ப்பிக்கும் வகையில் மனுக்கள் கையளிக்கப்பட்டன.
கதிர்காம கந்தனின் அருளைப் பெற இலங்கையின் பல பகுதிகளில் வாழும் இந்து மக்கள் ஆண்டுதோறும் இந்த யாத்திரையை பக்தியுடன் மேற்கொண்டு வருகின்றனர். பக்தர்கள் வனாந்தரப் பாதைகள் வழியாக “முருகனே துணை” என வேண்டி இந்த பாதயாத்திரையை மேற்கொண்டு, நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதோடு, அருள்பெற்றதற்கான நன்றியையும் செலுத்துகின்றனர்.

இருப்பினும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் இப்பெரும் யாத்திரைக்கு இதுவரை தேசிய ரீதியிலான அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பது இந்து மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
எனவே, கதிர்காம யாத்திரையை வர்த்தமானி மூலம் புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தி, பக்தர்களின் கோரிக்கைக்கு தீர்வு வழங்குமாறு மனுக்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சங்கமன்கண்டி ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற சமூக அமைப்புகளுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டன.
அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட விமானத்தில் பாகிஸ்தானுக்குள் திடீரென்று களமிறங்கியுள்ள மூத்த IRGC அதிகாரிகள்
நாடு முழுவதும் தீவிர வெப்பநிலை..! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri