சாந்தனின் மனுவை விசாரிப்பதில் இருந்து விலகினார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரிப்பதில் இருந்து இந்தியாவின் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் விலகியுள்ளார்.
தன்னை இலங்கைக்கு அனுப்புவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தமிழக அரசிடம் மனுதாரர் தெரிவித்துள்ளதாக இந்திய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்குக்கான நீதிபதிகளாக எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய குழு பட்டியலிடப்பட்ட நிலையில் மனுவை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக நீதிபதி சுந்தர் அறிவித்துள்ளார்.
நீதிமன்றம் உத்தரவு
இதற்கமைய வழக்கை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் தலைமையிலான அமர்வு முன் பட்டியலிட பதிவுத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி மனுதாரர் தனது வழக்கறிஞர் பி. புகழேந்தி மூலம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தான் இலங்கைப் பிரஜை என்றும், நவம்பர் 12, 2022, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க சிறையில் இருந்து விடுதலையான தான் 1946 ஆம் ஆண்டு வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்படும் வரை சிறப்பு முகாமின் எல்லையை விட்டு வெளியேறக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் நவம்பர் 11, 2022 அன்று உத்தரவு பிறப்பித்ததாக சாந்தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், யாழ்ப்பாணம் வல்வெட்டியில் வசிக்கும் தனது 75 வயதுடைய தாயார் கடுமையான சுகவீனமுற்றிருப்பதால், தாம் உடனடியாக இலங்கை செல்ல விரும்புவதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள மனுக்களை குறிப்பிட்ட அவர், தனது பிரதிநிதித்துவங்கள் இன்னும் பரிசீலிக்கப்படவில்லை என மனுவில் கூறியுள்ளார்.