லண்டனுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் நேரடி விமான சேவை கோரி கையெழுத்து வேட்டை ஆரம்பம்
லண்டனுக்கும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையே நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்குமாறு கோரி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிரத்தானிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கரேத் தோமஸ் பொதுமக்களிடம் கையெழுத்து திரட்டும் புதிய மனு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமான சேவை
பிரித்தானிய வாழ் தமிழர்கள், வட இலங்கையில் உள்ள தங்கள் குடும்பத்தினர் மற்றும் கலாச்சார உறவுகளுடன் இலகுவாகத் தொடர்பைப் பேண இந்த சேவை உதவும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமான சேவைகளைக் கொண்டு வாருங்கள் என்ற தலைப்பில் இந்த பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
திருமணம், இறுதிச் சடங்குகள், ஆன்மீகத் திருவிழாக்கள் மற்றும் குடும்பச் சந்திப்புகளுக்காக யாழ்ப்பாணம் செல்லும் பிரித்தானியத் தமிழ் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பயணச் சிரமங்களை இந்த மனு விரிவாக விளக்குகிறது.
ஹாரோ வெஸ்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான கரேத் தோமஸ், தற்சமயம் லண்டனிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமானங்கள் இல்லாத சூழலைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
லண்டனில் இருந்து வரும் பயணிகள் கொழும்பில் தரையிறங்கி, அங்கிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தூரம் மேலதிகமாகப் பயணிக்க வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் செல்ல சாலை அல்லது ரயில் வழியில் சுமார் 6 முதல் 7 மணி நேரம் வரை பயணிக்க நேரிடுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த கூடுதல் பயணம் முதியவர்கள், சிறு குழந்தைகளுடன் பயணிக்கும் குடும்பங்கள் மற்றும் அவசரக் குடும்பச் சடங்குகளுக்காகச் செல்வோர் மத்தியில் கடும் அசௌகரியங்களை ஏற்படுத்துகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த நேரடி விமான சேவை மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் தமிழ் சமூகத்தினருக்கு அழைப்பு
லண்டன் - யாழ்ப்பாணம் இடையேயான நீண்ட நேரப் பயணம் வெகுவாகக் குறையும் எனவும், பிரித்தானியா மற்றும் வட இலங்கை இடையேயான குடும்ப, சமூக மற்றும் கலாச்சார பிணைப்புகள் வலுவடையும் எனவும் வட மாகாணத்தின் சுற்றுலாத் துறை, தொழில் முதலீடுகள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார மேம்பாட்டிற்கு இது பெரும் ஊக்கமளிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

லண்டன் மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையே வணிக ரீதியாகச் சாத்தியமான நேரடி விமான சேவையை ஆராய்ந்து செயல்படுத்த பிரத்தானிய அரசாங்கம், இலங்கை அதிகார அமைப்புகள், விமான நிறுவனங்கள் மற்றும் லண்டன் விமான நிலையங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கரேத் தோமஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்த முயற்சியை வெற்றிபெறச் செய்ய பொதுமக்களும், புலம்பெயர் தமிழ் சமூகத்தினரும் இந்த மனுவில் திரளாகக் கையெழுத்திடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்குளியில் மூன்று பேர் பலியான கோர விபத்து! கடும் கோபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் - சாரதியின் பரபரப்பு வாக்குமூலம்