வேலைக்குச் சென்ற குடும்பஸ்தர் 8 ஆண்டுகளாக மாயம் - உறவினர் விடுக்கும் கோரிக்கை
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, அம்பன் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நபர் ஒருவர் கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் காணாமல் போயுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
குடத்தனை கிழக்கு, மளிகைத்திடலை வதிவிடமாகக் கொண்ட செல்வராசா அருந்தவச்செல்வன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இவர், கிளிநொச்சி பகுதிக்கு வேலைக்குச் செல்வதாக தனது மனைவியிடம் தெரிவித்துவிட்டு வீட்டிலிருந்து சென்ற நிலையில், இதுவரை வீடு திரும்பவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஒரு வாரம் வேலைச் செய்த தொலைபேசி
குறித்த நபர் காணாமல் போனமை தொடர்பில் 10.03.2018 அன்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அவர் காணாமல்போன தினத்திலிருந்து சுமார் ஒரு வார காலம் வரை அவரது தொலைபேசி இயங்கியதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எனினும், அவரது தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டபோது, அவர் எவ்வித பதிலும் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனமை தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், இதுவரை உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
காணாமல் போன செல்வராசா அருந்தவச்செல்வன் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 0774323487 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

