பொலிஸாரால் தேடப்படும் முக்கிய நபர் சரணடைவார்: ஜனாதிபதியின் நம்பிக்கை
பொலிஸாரால் தேடப்படும் முக்கிய நபர் ஒருவரை தற்போது காணவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
அந்த நபர் தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியை விட்டுவிட்டு தனது வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
குறித்த நபர் நாளைக்குள் சரணடைவார் என்று ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கைது நடவடிக்கை
இருப்பினும், அவர் நேரடியாக சந்தேக நபரின் பெயரைக் குறிப்பிடவில்லை. எனினும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை அவர் குறிப்பிட்டதாக பரவலாக ஊகிக்கப்படுகிறது.
முன்னதாக, வெலிகமவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தென்னகோனைக் கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலுக்கு அருகில், ஒரு வருடத்துக்கு முன்னர் நடந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையது, குறித்த சம்பவத்தின் போது ஒரு பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், வழக்கில் சந்தேக நபர்களான, தேசபந்து தென்னகோன் உட்பட எட்டு பொலிஸ் அதிகாரிகளைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |