தையிட்டி விகாரையும், தம்மதீபக் கோட்பாடும், தமிழர் பின்பற்றிய பௌத்தமும்
இலங்கையின் இனப்பிரச்சினை என்பது பௌத்த மதத்தின் பெயரால் மகாவம்சம் என்ற நூலின் ஐதீகக் கதைகளில் இருந்து கட்டமைக்கப்படுகின்றது.
இலங்கைத் தீவில் சிங்கள மக்களின் முன்னோர்கள் பௌத்தத்தை கொண்டு வந்தார்கள் என்ற ஐதீகம் சிங்கள மக்கள் மனங்களில் ஆழ வேரூன்றி புதைந்துள்ளது.
இலங்கைத்தீவு பௌத்த மதத்தையும் சிங்கள மொழியையும் பாதுகாப்பதற்காகப் தேர்ந்தெடுக்கப்பட்டது என்ற அடித்தளத்திலிருந்து “ஆகம, பாஷாவ, ரட்ட “ என்ற கோசம் சிங்களமக்களிடம் திணிக்கப்பட்டது.
ஆகம -என்பது பௌத்த மதம், பாஷாவ -என்பது சிங்கள மொழி. ரட்ட- என்பது சிங்கள அரசு. இந்த மூன்று அம்சங்களையும் ஒருங்கிணைத்த கட்டமைப்பாக சிங்கள- பௌத்த தேசியவாதம். வளர்க்கப்பட்டுள்ளது. இன்றைய சிங்கள ஆட்சியாளர்களிடம் இனம், மதம், மொழி, நாடு, அரசு ஆகிய ஐந்தினையும் பின்னிப் பிணைத்து சிங்கள பௌத்த பேரினவாதமாக வளர்ச்சி கண்டுள்ளது.
தமிழின அழிப்பு
இதனால் தான் தமிழர் தாயகத்தை ஒரு தொடர் படிமுறையில் கபளீகரம் செய்வதற்காகவே இந்த பேரினவாத சிந்தனை கருத்தியல் தமிழின அழிப்பை முன்னெடுக்கிறது. அதனை மொழி, நிலம், மதம் என்ற அடிப்படையில் தமிழர் தாயகத்தில் விகாரை கட்டுதல், சிங்கள குடியேற்றம் என்பவற்றின் மூலம் தமிழினத்தை சிங்களமயப்படுத்த முனைகிறது.
மகாநாம தேரர் கி.மு 5 நூற்றாண்டுக்கும் கிபி 6ஆம் நூற்றாண்டு இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த, நிலவிய பௌத்த மதம் சார்ந்த அச்சங்களும், நெருக்கடிகளும், இந்திய படையெடுப்புச் சார்ந்த ஐயங்களும் தமிழர் மீதான எதிர்ப்புணர்வை தோற்றுவித்திருந்தது.
தான் வாழ்ந்த கி.பி 6ஆம் நூற்றாண்டுச் சூழல் வைத்துக்கொண்டு கடந்தகால நிகழ்வுகளின் கசப்பான அனுபவங்களை தன்னுடைய இலட்சிய வாதத்திற்க்கு ஏற்ற வகையில் சம்பவங்களை திரித்து கதைகளைப் புனைந்து மகாவம்சத்தில் பதிந்தார். மகாநாமதேரரின் இலட்சியவாதமே (Idealism) இன்றைய இலங்கை இனப் பிரச்சினையின் அத்திவாரமும் அடித்தளமுமாகும்.
ஏற்கனவே இருக்கின்ற வரலாறுடன் புதிதாக கற்பனை கதைகளையும் கதாபாத்திரங்களையும் இயற்கை அமைப்புக்களையும் ஒன்றிணைத்து தன்னுடைய விருப்புவாதத்தை (Idealism) கோட்பாடாக (Ideology) வடிவமைப்பு செய்து விட்டார். அதுவே இன்று தம்மதீப கோட்பாடாக பௌத்த மாகாசங்கத்தினரால் உருவகம் செய்யப்படுகிறது.
இலங்கைத்தீவின் பௌத்த மதம் என்பது சிங்கள மக்கள் நம்புகின்ற மகிந்ததேரர் வருகையோடு ஆரம்பமானதல்ல. மகிந்தர் வருகைக்கு முன்னரே மகாயாண பௌத்த தர்மத்தை வட இலங்கை தமிழர்கள் பின்பற்றினார் என்பதற்கான வலுவான தொல்லியல் ஆதாரங்கள் தமிழர் தாயக மண்ணில் பரவி கிடக்கிறது. மகாயாண பௌத்தம் கி.மு 4லிருந்து கி.பி 7 வரையான சுமார் ஆயிரம் ஆண்டு காலம் நாகதீபம் (யாழ்ப்பாண தீபகற்பம்) உத்தரதேசம்( வன்னிப்பெள்ளபரப்பு) மற்றும் கிழக்கிலங்கை ஆகிய தமிழர் நிலத்தில் மகோன்னத நிலையில் செல்வாக்கு பெற்றிருந்தது.
மகாயண பௌத்தம்
தமிழர் மத்தியிலிருந்து மகாயாண பௌத்தம் 10ம் நூற்றாண்டில் சோழப் பேரரசின் வளர்ச்சியும், ஆதித்த சோழனின் கொலைக்கு பௌத்தர்கள் காரணமாக இருந்தார்கள் என்பதனால் ராஜேந்திர சோழன் கேரளாத்தின் காந்தலூர் சாலையும், அனுராதபுரத்தையும் படையெடுத்து அழிக்கும் வரை தமிழர்களின் முக்கிய மதங்களில் ஒன்றாகவே மகாயாண பௌத்தம் நிலவியது.
இவ்வாறு தமிழர் தாயகத்தில் மகாயாணபௌத்தம் அழிவடைந்து தொல்பொருட்களாகவும், தொல்லியல் தளங்களாகவும் காணப்படும் மகாயண பௌத்த சின்னங்களையே இன்றைய சிங்கள தேரவாத பௌத்த அரசும், சிங்கள மக்களும், பௌத்தமகாசங்கமும் உரிமை கொண்டாடுகின்றனர். தமிழர்கள் போற்றிக்காத்த மகாயண பௌத்தத்தை தேரவாத பௌத்தமாக திரிபுபடுத்தி தமிழர் தாயகத்தை ஆக்கிரமிக்க முனைகின்றனர்.
மகாவம்ச ஐதீக கதையில் சங்கமித்தை வருகை பற்றிக் குறிப்பிடுகின்ற போது யம்புத்துறை (யம்புகோலாபட்டணம்) கரையில் வந்து இறங்கினார் என்றும் அவரை வரவேற்க தீசன் தன்னுடைய பரிவாரங்களுடன் சென்று யம்புத்துறையில் தங்கியிருந்தார் எனவும் குறிப்பிடுவதிலிருந்து யம்புத்துறை ஏற்கனவே அவர்களுக்கு பரிட்சயமான ஒரு இடம் என்பதும் அதுவே இன்றைய திருவடிநிலை என்ற கரையோர கிராமத்திலேயே சங்கமித்தை வந்திறங்கினார். அந்த இடத்தில் புத்தரின் பாதச்சுவடு பொறிக்கப்பட்டிருக்கிறது. அது உண்மையில் தேரவாத பௌத்தத்துக்கு உரியதுதான்.
அதற்காக அந்த இடத்தை தேரவாத பௌத்தர்கள் உரிமை கொண்டாட முடியாது. தேரவாதபௌத்தம் என்பது புத்தரின் தந்த தாதுவையும் புத்தரின் காலடிச் சுவடியின் வழிபடும் முறைமையைக் கொண்டது.
புத்தரின் உருவச்சிலை வழிபாட்டையும் தூப தீபம் காட்டுதல் பண்டங்கள் படைத்தல் என்பன தென்னிந்திய பண்பாட்டின் அம்சமான மகாயண பௌத்தத்துக்கே உரித்தானது. இதுவே மகாயன பௌத்தத்துக்கும் தேரவாத பௌத்ததிற்கும் இடையிலான பிரதான வழிபாட்டுமுறை வேறுபாடாகும்.
சங்கமித்தை கொண்டுவந்த வெள்ளரசு மரக்கிளை புதிதாக உருவாக்கப்பட்ட அதில் ஒரு கன்று யம்புத் துறைக்கு அருகில் நாட்டப்பட்டது என்று மகாவம்சம் கூறுகின்றது. அரச மரத்திற்கும் வெள்ளரசு மரத்திற்கும் இடையில் வித்தியாசம் உண்டு. யாழ்ப்பாணத்தின் எந்தப் பகுதியிலும் வெள்ளரசுமரம் கிடையாது. மற்றும் அரசமரம் ஆலமரம் போன்று வித்துக்களினாலேயே புதிய தாவரங்கள் உருவாக்கப்படுகின்றது.
கிளையை வெட்டி புதிய தாவரத்தை உருவாக்கினார்கள் என்பது சந்தேகமே. காயா துறை சாம்பல் துறையிலிருந்து 2 மைல் கிழக்கே அமைந்துள்ள இத்துறைமுகமானது புத்தர் காலத்தில் வணிகர்களும் யாத்ரீகர்களும் செல்வதற்கான படகுத்துறை இருந்திருக்கின்றது.
ஆனால் கிபி 8ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து காங்கேசன் அதாவது கந்தவேல் விக்கிரகம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு இத்துறையில் கொண்டுவந்து இறக்கப்பட்டதன் பின் காயாதுறை காங்கேசன்துறை என பெயர் பெறலாயிற்று.
கந்தரோடையில் 50இற்கும் மேற்பட்ட அழிவடைந்த மகாயாணபௌத்த சின்னங்கள் உள்ளன. இவை இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் நாகார்ஜுன கொண்டா, அமராவதி கலைப்பாணியில் கட்டப்பட்டுள்ளன. இக்கலையானது ஆந்திராவில் கி.மு காலத்திலிருந்து கிபி 4ம் நூற்றாண்டுக்கு உட்பட்ட காலத்தில் வளர்ச்சி அடைந்தவை.
எனவே, அக்காலப்பகுதியில் சமுத்திர வர்த்தக நாகரீகம் இந்தியாவுக்கும் வட இலங்கைக்கும் இடையில் வளர்ச்சியுற்று இருந்தமையினால் இக்கலைப்பாணி வட இலங்கையிலும் பரவியது எனலாம்.
இதற்கு கந்தரோடை மற்றும் வல்லிபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் பொருட்களையும், சாசனங்களை ஆதாரமாக கூறமுடியும். 1966இல் கந்தரோடை ஆய்வின்போது 22 டகோபாக்கள் வெளிக்கொணரப்பட்டது. இவை ஆந்திரா பாணியில் 2 தொடக்கம் கிபி 4 வரை இவை முருகைக் கற்களும் சுண்ணாம்புச் சுதையும் (சாந்து) கொண்டு கட்டப்பட்டவை.
இவை 6 தொடக்கம் 23 அடி வரை விட்டம் கொண்டிருந்தன. இதற்கு நடுவில் அகழ்வாய்வு செய்யப்பட்ட போது மனித எலும்புகளும், பற்களும், சங்கினால் ஆன மோதிரங்கள், வளையல்கள், அணிகலன்கள் என்பதையும் செப்பு, தங்க நாணயங்களும், முருகைகல் கற்பேளை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், வெள்ளி, செப்பு நாணயங்களில் திரிசூலமும் போர்க்கோடரியும் இருந்தது.
இவை கிமு 500 காலத்தை முந்தியவை அக்காலத்தில்தான் பாண்டியரின் அரசின் இலச்சினையாக திரிசூலமும் போர்க்கோடரியும் இருந்தது. ஆனால் கிபி 300ல் அவர்கள் தங்கள் இலச்சினையாகமூன்று முகம் கொண்ட தாதுகோபம், யானை, வண்டியில் சில்லுமாதிரியான சக்கரம் ஆகியவற்றை மாற்றி அமைத்துக்கொண்டனர்.
பிற்காலத்தில் கயல்மீன் அவர்களது இலச்சினையாயிற்று. கந்தரோடை, வல்லிபுரம், அனுராதபுரத்திலும் கண்டெடுக்கப்பட்ட அனேகமான நாணயங்கள் திரிசூலம் போர்க் கோடரி உடையவையாக இருப்பதிலிருந்து இக்காலப்பகுதியில் கந்தரோடையில் வாழ்ந்த மக்கள் கொற்கைப் பாண்டியர் உடன் வர்த்தக உறவில் ஈடுபட்டதோடு இந்த டகோபாக்கள் கிமு 5ற்கும் கிமு 3ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் கட்டப்பட்டவையாகும்.
எனவே கந்தரோடை பௌத்தம் என்பது புத்தர் காலத்துக்குரிய தளங்கள் என்பது புலனாகிறது. அங்கு கண்டெடுக்கப்பட்ட நாணயங்களை ஆய்வு செய்த நாணய வல்லுனர்களான கொற்றிங்டன்(1924 ) லோவந்தால்(1988) அரசின் அல்சின்(1995) ஆகியோர் இவை கொற்கை பாண்டியர்கள் உடையதுதான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
''போர் அரக்கர் ஓர் ஐவர்க் கறவமிழ்தம் பொழிந்தனையே ஆர் அமிழ்தம் மணிநகர் குலம் உய்ய அருளினையே வார் சிறப்புள் அரையர்க்கும் வாய்மை நெறி பகர்ந்தனையே பார்மிசை ஈரைந்தும் பாவின்றிப் பயின்றனையே'' (-வீரசோழியம்) கி.மு 5ம் நூற்றாண்டு காலத்தில் புத்தபிரான் உயிரோடு இருந்த காலத்தில் புராதன யாழ்ப்பாணத்தில் நாகர்கள் பௌத்த மதத்தை தழுவி இருந்தார்கள் என்பதை அன்றைய மேலைத்தேய தொல்லியல் ஆய்வாளர்களான சேர்.போல்.பீரிஸ், பாக்கர் , ஜே.பி.லுயிஸ் போன்ற மேலைத்தேய தொல்லியல் வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
புத்தர் சிலை
1890 -1916க்கு இடைப்பட்ட காலத்தில் யாழ்ப்பாண அரசாங்க அதிபராக இருந்த ஜே.பி.லுயிஸ் தொல்லியல் வரலாற்று ஆய்வாளரும் சமூகவியல் ஆய்வாளருமாவர் யாழ்ப்பாணத்தின் அரசர்களின் கோயில்கள் கட்டடங்களை இடித்து போர்த்துக்கேயர்கள் பிற கட்டடங்களை உருவாக்கியதனால் ஏற்பட்ட பாரம்பரிய, கலாசார சின்னங்களின் அழிவுகளைக் கண்டு கண்ணீர் சிந்திய மனிதராவார். லுயிஸ் யாழ்ப்பாணத்தின் கலாசார சின்னங்களை சேகரித்து பாதுகாக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
1890 -1916களில் யாழ்ப்பாணத்தில் அவர் மேற்கொண்ட ஆய்வுகளின் போது கண்டபிடிக்கப்பட்ட பௌத்த மத வழிபாட்டு சின்னங்கள் பற்றிய விபரங்களை அவர் எழுதிய ‘‘வன்னி மாவட்டங்கள் ஒரு கையேடு‘‘ என்ற நூலில் தந்திருக்கிறார். அவற்றில் வல்லிபுரத்தில் மேற்கொண்ட ஆய்வுகள் முக்கியமானது.
1912 இல் இன் வல்லிபுரம் ஆழ்வார் கோவிலை பார்வையிடச் சென்ற அன்றைய கலெக்டராக இருந்த ”ஜே.பி லூயிஸ் அவர்கள் கோயில் பூசகரால் காட்டப்பட்ட ஒரு பௌத்த தாதுகோபத்திற்கான தொல்லியல் தளத்தை காண்பித்த போது அவர் அவ்விடத்தை ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுபோது அங்கு 8அடி உயரமான பளிங்கு புத்தர் சிலை ஒன்றைக் கண்டுபிடித்தார்.
இது அமராவதி கலைப் பாணியில் வடிவமைக்கப்பட்டிருந்தது பளிங்கு பறைகள் இலங்கையில் கிடையாது. இந்த அமராவதி கலைப் பாணி என்பது ஒரு சிற்பத்தினை இரண்டு மூன்று பகுதிகளாக பிரித்து வடிவமைத்து விட்டு ஒட்டு முறைமூலம் ஒட்டி பொருத்துவது. இந்த கலைப்பாணி ஆந்திராவில் கி.பி 2 தொடக்கம் 4 ஆம் நூற்றாண்டு காலத்தில்த்தான் வளர்ச்சி அடைந்திருந்தது.
இத்தாது கோபுரத்தின் உள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் இருந்த தங்கத்தின் சாசனம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது இது 39.16 அங்குலம் நீளமுள்ள முடையதாகவும் ஒரு அங்குலம் அகலம் உடையதாகவும் 69.5 கிராம் நிறை உடையதான இந்தச் சுருள் காணப்பட்டது. இதில் பிராகிருத மொழியில் பட்டிப்புரோலு பிராமியில் எழுதப்பட்ட வாசகம் காணப்பட்டது.
அது வசபன்னுடையது என்றும் அதை சிங்கள பிராமி என்றும் பரணவிதான தவறாக வாசித்தார் ஆனால் அது பட்டிப்பிரோலு அபிராமியின் சிறப்பு எழுத்துக்களுடன் இருப்பதனால் அது தமிழ் பிராமி என்றும் தமிழ் கல்வெட்டியாளாலர்கள் அறுதியிட்டுக் கூறுகின்றனர். இங்கு கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் சாசனங்கள் பல்லவதுறை தொண்டமனாறு ஆகிய படகுத்துறை ஊடாக நடந்த சமுத்திர வர்த்தக போக்குவரத்துக்கனினால் செல்வம் கொழிக்கும் ஒரு பௌத்த நகரமாக வல்லிபுரம் இருந்திருக்கிறது.
1917 தொடக்கம் 2019 வரை சேர் போல் பிரீஸ் இலங்கை தொல்லியல் துறை அதிபர் அவர்கள் மேற்கொண்ட இந்த கந்தரோடை, வல்லிபுரம் ஆய்வின் முடிவில் ‘‘‘‘யாழ்ப்பாண மக்கள் தங்கள் வரலாறு இந்த மண்ணிலே புதைந்து இருப்பதை என்று அறியும்போது ஆச்சரியம் கலந்த சந்தோஷம் அடைவர்‘‘‘‘ என்று குறிப்பிட்டார். அத்தோடு இத்தகைய புதைகுழிகளுக்கு மேல் தூபிகளை அமைக்கும் வழக்கம் யாழ்ப்பாணத்துக்கு மட்டுமே தனித்துவமானது என குறிப்பிட்டார்.
இவற்றினை 1970 இல் பென்சில்வேனியா பல்கலைக்கழக பேராசிரியர் விமலா போக்கி c13 ரேடியோ கார்பன் காலக்கணிப்பு செய்து அவை கிமு 7க்கும் 5 க்கும் இடைப்பட்டது என உறுதிப்படுத்தியுள்ளார். அத்தோடு கந்தரோடையில் கிமு 1000 ஆண்டளவில் மக்கள் குழுமமாக வாழ்ந்தார்கள் என்றும் கிமு 500 ஆண்டளவில் நகர நாகரீகம் அரசமைப்பு வாழ்ந்தார்கள் என்றும் உறுதிப்படுத்தினர்.
சேர்.போல்.பீரிஸின் தீர்க்கதரிசனம் மெய்யாகி விட்டதை உணர முடிகிறது கிறிஸ்துவுக்கு முன் அரிக்கமேடு கொட்டை ஆதிச்சநல்லூர் கொற்கை பாண்டிய நகரங்கள் வளர்ச்சியடைந்தததைப்போல கந்தரோடையில் நாகரீக வளர்ச்சி அடைந்து நெருங்கிய தொடர்பைக் பேனியிருக்கின்றது என்பதே பொருத்தமானது. 1952-1956 இடையில் கந்தரோடையில் இருந்த ஹோமங்களை (டகோவாக்களை) பரணவிதான கோள வடிவில் தாதுகோபங்களை போல மாற்றி அமைத்து விட்டார்.
மணிபல்லவம் என்றும் இன்று நயினாதீவு என அழைக்கப்படுகின்ற யாழ். தீபகற்பத்தை அண்டிய சிறிய தீவாகிய நாகர்களின் ஆட்சிப் மையமாக விளங்கிய அன்றைய மணிபல்லவத் தீவில் 2ம் நூற்றாண்டு வரையில் நிலவிய சமூகவியலை பௌத்த காப்பியமான மணிமேகலை கதைக்களமாக அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் மகாவம்சமும் அதன் முதல் அத்தியாயத்திலேயே இத்தீவிற்கு புத்தர் வந்தார் என்று குறிப்பிட்டு அந்த தீவை பௌத்தத்துக்கு சிங்கள பௌத்தத்திற்கு சொந்தமாக உரிமை கோருவதை மகாநாம தேரர் இலக்காக கொண்டு இருந்தார் என்பதனை இதிலருந்து அறிய முடிகிறது. ஆனால் புத்தபிரான் பரிநிர்வாணம் அடைந்த 110 ஆண்டுகளின் பின் கூட்டப்பட்ட இரண்டாவது பௌத்தசங்க அமர்வில் பிக்குகளின் ஒழுக்க நெறி சார்ந்த ஏற்பட்ட முரண்பாடுகளினால் சங்கம் இரண்டாக உடைந்தது.
அவ்வாறு உடைந்த பகுதியினர் மகாயான பௌத்தம் என்ற மதப் பிரிவை உருவாக்கினார். அந்த மகாயான பௌத்த பிரிவுதான் முதலில் மணி பலவற்றிற்கும், நாகதீபத்திற்கும், வட இலங்கைக்கும் பரவியது. அதன் பின்னர்தான் மஹிந்ததேரரும் அதை அடுத்து அவருடைய தங்கையான சங்கத்தையும் நாகதீப துறையில் இறங்கி அநுராதபுரம் மிகிந்தலை நீசமலை செல்வது இலகுவானதாக இருந்தது என்பதனை புரிந்து கொள்ள முடிகிறது.
மணிபல்லவத்தில் அன்றைய காலத்தில் உருவாக்கப்பட்ட மகாயான பௌத்த தாதுகோபம் தான் இன்று அங்கு தேரவாத பௌத்த தாதுகோபம் ஆக மாற்றியமைத்து சிங்கள அரசு உரிமை கூறுகிறது. உண்மையில் அது நாக அரசுக்குச் சொந்தமானது.
அது தமிழர்களுடைய பூர்வீகச் சொத்து. எனவே நயினை நாகபூசணி அம்மனுக்கு செல்பவர்கள் கட்டாயம் நாகவிகாரைக்கு செல்வதன் மூலம் மீண்டும் மகாயாண பௌத்தத்தை தமிழர்கள் பக்கம் கொண்டுவர வேண்டியது இன்றைய தேவையாகும். இந்தப் பின்னணியில் கையிட்டி விகாரை தொடர்பான சிங்களத்தின் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களும் அனுராவின் மௌனமும் பற்றி அடுத்த தொடரில் பார்ப்போம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 23 February, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
