கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் மோசடியில் சிக்கிய நபர்
ரஷ்யாவில் உயர்கல்வி வழங்குவதாகக் கூறி இலங்கை முழுவதிலும் உள்ள மாணவர்களை சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்று பணத்தை ஏமாற்றியதாக கூறப்படும் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளது.
சந்தேகநபர் வத்தளை, ஹுனுப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.
தமிழர் பகுதியில் நீண்ட காலமாக இயங்கிய இராணுவச் சோதனைச் சாவடி தொடர்பாக ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
குற்றப்புலனாய்வுப்பிரிவினர் முறைப்பாடு
ரஷ்யாவில் உயர் கல்விக்காக கட்டான பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரை ஏமாற்றியதாக நீர்கொழும்பு விஷேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பெறப்பட்ட விமானத் தடையைப் பயன்படுத்திய அவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு மேலதிகமாக மாத்தறை தலைமையக பொலிஸாருக்கு 17 முறைப்பாடுகளும், குளியாப்பிட்டிய பொலிஸில் 02 முறைப்பாடுகளும், குருநாகல் பொலிஸில் 03 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
மேலும், இவர் தொடர்பில் வாதுவ, அம்பாறை மற்றும் மொரட்டுவ பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதான பொலிஸ் பரிசோதகர் ரோஹன முனசிங்க தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் எரிக் பெரேராவின் பணிப்புரைக்கமைய நீர்கொழும்பு விஷேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரோஹன முனசிங்கவின் மேற்பார்வையில் அதிகாரிகள் குழுவினால் கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |