கடற் கொள்ளையர்களை தடுக்க சிறிய படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை
மட்டக்களப்பு மாவட்ட கடற்பரப்பில் இடம்பெற்று வரும் கடற் கொள்ளையர்களின் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், சிறிய கடற்றொழில் படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறையை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் கடற் கொள்ளை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கடற்கொள்ளை என்பது மிகவும் முக்கியமான பிரச்சினையாக உள்ளது.
சட்டவிரோத நடவடிக்கை
இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பில் பிரதேச மக்களுக்கு நன்கு தெரியும். கடந்த காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் வெளிப்படையாகப் பேசுவதற்குக்கூட அச்சம் நிலவியது.

தற்போது இவ்விடயம் தொடர்பில் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளை மிகவும் அவதானத்துடன் அணுகி வருகின்றோம். கடற் கொள்ளையர்கள் தொடர்பாக தகவல் தமக்குக் கிடைத்தவுடன், பாதுகாப்பு அதிகாரிகளுடன் இது குறித்து உடனடியாகக் கலந்துரையாடினேன்.
இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்காக பாதுகாப்புப் படையினருடன் மேலும் விசேட கலந்துரையாடல்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகள்
சிறிய படகுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கடற் கொள்ளை நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக, அந்தப் படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் தற்போது நடவடிக்கைகள் வருகின்றன.

அத்துடன், சிறிய படகுகளை இலகுவாக அடையாளம் காணக்கூடிய வகையில் அவற்றின் நிறங்களை மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்பதோடு, இந்த நடைமுறைகள் கூடிய விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.
இதேவேளை, கடற் கொள்ளைச் சம்பவங்களுடன் சில பாதுகாப்புப் படையினரும் தொடர்புபட்டிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.