முறையான ஒழுங்குமுறையின் கீழ் குழாய்க் கிணறு அமைப்பதற்கு தீர்மானம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் குறிப்பாக, எந்தவொரு முறையான கண்காணிப்புமின்றி குழாய்க் கிணறுகள் அமைக்கப்படுவதையும், அதன் மூலம் குடாநாட்டின் நிலத்தடி நீர்வளத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் கருத்திற்கொண்டு, குழாய்க் கிணறுகள் அமைக்கும் நடவடிக்கையை முறையான ஒழுங்குமுறையின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் குழாய்க் கிணறுகள் அமைப்பதை ஒழுங்குமுறைப்படுத்துவது தொடர்பான ஆரம்பக் கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நேற்று (22.09.2026) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
குடாநாட்டில் கண்காணிப்புக்கு உட்படாத வகையில் குழாய்க் கிணறுகள் அமைக்கப்படுவதால் நிலத்தடி நீர்வளத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் இதனை முறையாகக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
கோரிக்கை
இதன்போது, நீர்வளச் சபையின் வடபிராந்திய முகாமையாளர், குழாய்க் கிணறுகள் அமைப்பதை ஒழுங்குமுறைப்படுத்தும் நோக்கில் 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்தார்.
அதன்படி, குழாய்க் கிணறு அமைப்பதற்கு நீர்வளச் சபையின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், நீர்வளச் சபையில் பதிவு செய்யப்பட்டவர்களே குழாய்க் கிணறுகள் அமைப்பதற்கான இயந்திரங்களைப் பயன்படுத்த முடியும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பிலும் எடுத்துரைக்கப்பட்டது.

எனினும், தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப குறித்த வர்த்தமானி அறிவித்தலில் மேலும் சில விடயங்கள் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளதாகக் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனடிப்படையில், தேவையான திருத்தங்களை உள்ளடக்கிய புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு கௌரவ சுற்றாடல் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.