ஹட்டன் குப்பைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு எப்போது..!
மத்திய மலைநாட்டின் முக்கிய வர்த்தக மற்றும் போக்குவரத்து நகரங்களில் ஒன்றாகத் திகழும் ஹட்டன், சிவனொளிபாதமலை, சென் கிளையார், டெவோன் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல முக்கிய சுற்றுலாத் தளங்களுக்குச் செல்லும் பிரதான நுழைவாயிலாகவும் காணப்படுகிறது.
நாளாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த நகரம், பல ஆண்டுகளாகத் தீர்வு காணப்படாத குப்பைப் பிரச்சினையால் அவதியுற்று வருகின்றது.
ஹட்டன் நகரின் குப்பைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே ஹட்டன் வாழ் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாகும். ஆனால், பல ஆண்டுகளாக பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டும், அவை நடைமுறைப்படுத்தப்படுவதில் ஏற்பட்ட தடைகள் காரணமாக பிரச்சினை தொடர்ந்துகொண்டிருக்கிறது.
குடாகம முதல் பல்வேறு இடங்கள் வரை...
மிக நீண்ட காலமாக ஹட்டன் நகரில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் குடாகம பகுதியில் கொண்டு செல்லப்பட்டு கொட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், அப்பகுதி மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பின் காரணமாக அங்கு குப்பைகளை கொட்டும் நடவடிக்கையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஹட்டன்–டிக்கோயா நகரசபையின் முன்னாள் தலைவர் அபுசாலி தலைமையிலான காலப்பகுதியில், எபோஸ்லி தோட்டப் பகுதியில் காணி ஒன்றைப் பயன்படுத்தி குப்பைகளை மீள்சுழற்சி செய்வதுடன் சேதனப் பசளை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், பின்னர் அந்தப் பகுதியில் நீரோட்டம் காணப்படுவதால் குப்பைகளை கொட்டுவதற்கு குறித்த இடம் பொருத்தமானதல்ல என்றும், அதற்கான அனுமதி பெறுவதில் சிக்கல்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதன் பின்னரும் குப்பைகளை கொட்டுவதற்காக பல்வேறு இடங்கள் அடையாளம் காணப்பட்டன. ஹட்டன்–டிக்கோயா நகரசபையின் நிர்வாகத்தை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொறுப்பேற்றிருந்த காலத்திலும், அப்போது இருந்த அதிகாரிகளுடன் இணைந்து குப்பை முகாமைத்துவத்திற்கான இடங்களைத் தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும், தெரிவு செய்யப்பட்ட பல இடங்களுக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவற்றையும் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
அரசியல் மாற்றங்கள் வந்தும் பிரச்சினை மாறவில்லை
ஹட்டன் நகரின் குப்பைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக பல்வேறு காலகட்டங்களில் அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கூறப்பட்டாலும், நடைமுறைப்படுத்தக்கூடிய நீண்டகாலத் திட்டம் இதுவரை முழுமையாக உருவாக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

குப்பைகளை அகற்றுவதற்கான பொருத்தமான காணியைத் தெரிவு செய்தல், அதனை சட்டரீதியாகப் பெற்றுக்கொள்ளுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் அப்பகுதி மக்களின் எதிர்ப்புகளுக்கு தீர்வு காணுதல் போன்ற விடயங்களில் நீண்டகால தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால், ஆட்சி மாறினாலும் ஹட்டன் நகரின் குப்பைப் பிரச்சினை மட்டும் மாறவில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
சுற்றுலா நகரமா? குப்பை நகரமா?
ஹட்டன் நகரம் வெறுமனே ஒரு உள்ளூர் வர்த்தக நகரம் அல்ல. இது சிவனொளிபாதமலைக்கு செல்லும் முக்கிய பாதையில் அமைந்துள்ளதுடன், சென் கிளையார், டெவோன் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்குச் செல்லும் பயணிகளும் பயன்படுத்தும் முக்கிய நகரமாகும்.
மத்திய மலைநாட்டின் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கான நுழைவாயிலாகக் கருதப்படும் ஹட்டன் நகரம், குப்பைகள் முறையாக அகற்றப்படாத காரணத்தால் அசுத்தமான தோற்றத்தைப் பெறுவது நகரத்தின் சுற்றுலா மதிப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.
நாளாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் நகரத்தின் நிலைமை இவ்வாறு தொடர்வது குறித்து பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் அதிருப்தி காணப்படுவதாக கூறப்படுகிறது.

புதிய நிர்வாகத்திடமும் எதிர்பார்ப்பு
ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் நிர்வாகத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அணியினர் பொறுப்பேற்ற பின்னரும், குப்பைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டது.
குப்பைகளை முறையாக முகாமைத்துவம் செய்வதற்கான பொருத்தமான இடத்தைப் பெற்றுக்கொண்டு, ஹட்டன் நகரை சுத்தமான மற்றும் அழகான நகரமாக மாற்றுவோம் என்ற எதிர்பார்ப்பு முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை என பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கிடையில், மத்திய மாகாண ஆளுநர் தலைமையில் ஹட்டன் ரொத்தஸ் பகுதியில் குப்பைகளை, குறிப்பாக பொலித்தீன் உள்ளிட்ட பொருட்களை எரிப்பதற்காக இடமொன்று தெரிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், அந்த நடவடிக்கைக்கும் எதிராக அப்பகுதி மக்களிடையே போராட்டங்கள் உருவாகியுள்ளன. இதனால், குப்பைகளை எங்கு கொட்டுவது அல்லது எவ்வாறு அகற்றுவது என்ற அடிப்படை கேள்விக்கு கூட அதிகாரிகளும் அரசியல் பிரதிநிதிகளும் இன்னமும் நிரந்தரமான பதிலை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குப்பை என்பது பிரச்சினை மட்டுமல்ல - வளமும் கூட
ஹட்டன் நகரில் உருவாகும் குப்பைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கொண்டு சென்று கொட்டப்பட வேண்டிய கழிவுகள் அல்ல. குப்பைகளை மூலத்திலேயே வகைப்படுத்தி, மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை தனியாகப் பிரித்து, சேதனக் கழிவுகளிலிருந்து சேதனப் பசளை தயாரித்து, பிளாஸ்டிக் உள்ளிட்ட மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை தனியாகச் சேகரிக்கும் முறையை உருவாக்க முடியும். இதற்கான முயற்சிகள் ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தலவாக்கலை - பூண்டுலோயா பிரதான வீதிப் பகுதியில் கடந்த காலங்களில் பல கோடி ரூபாய் செலவில் குப்பைகளிலிருந்து சேதனப் பசளை தயாரிப்பதற்கும், பிளாஸ்டிக் பொருட்களை மீள்சுழற்சி செய்வதற்குமான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் புகையிரதப் பாதையும் அண்மையில் காணப்படுவது, எதிர்கால குப்பை முகாமைத்துவத் திட்டங்களை ஆராயும் போது கவனத்தில் கொள்ளக்கூடிய விடயமாகும்.

புகையிரதப் போக்குவரத்து - ஆராயப்பட வேண்டிய மாற்று வழி
ஹட்டன் நகரின் குப்பைகளை முறையாக வகைப்படுத்தி, குறிப்பிட்ட நிலையத்தில் சேகரித்து, புகையிரத திணைக்களத்துடன் கலந்துரையாடி, குப்பை போக்குவரத்திற்காக தனியான புகையிரதப் பெட்டியைப் பயன்படுத்தும் சாத்தியக்கூறையும் ஆராய முடியும்.
இது நடைமுறைக்கு ஏற்றதா என்பதை முதலில் தொழில்நுட்ப ரீதியாகவும், சுற்றுச்சூழல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறான திட்டம் சாத்தியமானதாக நிரூபிக்கப்பட்டால், ஹட்டன் நகரம் மட்டுமன்றி கொட்டகலை, நானுஓயா உள்ளிட்ட நகரங்களின் கழிவுகளையும் ஒருங்கிணைந்த முறையில் முகாமைத்துவம் செய்வதற்கான பிராந்தியத் திட்டமாக இதனை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு இருக்கலாம்.
ஆனால், இத்தகைய திட்டம் வெறும் யோசனையாக இருக்காமல், நகரசபை, மத்திய மாகாண நிர்வாகம், சம்பந்தப்பட்ட அமைச்சுகள், புகையிரத திணைக்களம், சுற்றுச்சூழல் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் சமூகங்களின் பங்களிப்புடன் விரிவான ஆய்வுக்குப் பின்னரே முன்னெடுக்கப்பட வேண்டும்.
முதலில் மாற வேண்டியது குப்பை சேகரிக்கும் முறை
குப்பைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமெனில், குப்பை கொட்டுவதற்கான இடத்தைத் தேடுவது மட்டுமே போதுமானதல்ல. முதலில் நகரில் குப்பை உருவாகும் இடத்திலேயே அதனை வகைப்படுத்தும் நடைமுறை உருவாக்கப்பட வேண்டும்.

மக்களின் பங்களிப்பும் அவசியம்
குப்பைப் பிரச்சினைக்கு அரசாங்கத்தையும் நகரசபையையும் மட்டும் பொறுப்பாக்குவது தீர்வாகாது. நகர மக்களும் தங்களது பொறுப்பை உணர வேண்டும். வீடுகள், வர்த்தக நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் நிறுவனங்களில் உருவாகும் குப்பைகளை முறையாகப் பிரித்து வழங்கும் பழக்கம் உருவாக்கப்பட வேண்டும்.
அதேவேளை, குப்பை சேகரிப்பு நேரம், சேகரிக்கப்படும் கழிவுகளின் வகைகள் மற்றும் அவற்றை வழங்க வேண்டிய நடைமுறைகள் குறித்து நகரசபை மக்களுக்கு தெளிவான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
இன்னும் எத்தனை ஆண்டுகள்?
ஹட்டன் குப்பைப் பிரச்சினை இன்று உருவானதல்ல. பல ஆண்டுகளாக பல்வேறு நிர்வாகங்களின் கீழ் தொடர்ந்து பேசப்பட்டு வரும் பிரச்சினையாகும். பல இடங்கள் தெரிவு செய்யப்பட்டன. சில கைவிடப்பட்டன. சில திட்டங்களுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். புதிய நிர்வாகங்கள் வந்தன. புதிய வாக்குறுதிகளும் முன்வைக்கப்பட்டன. ஆனால், பிரச்சினை மட்டும் தொடர்கிறது.
