ஆற்றினை கடந்தே உயிரிழந்தவர்களை கொண்டு செல்லும் அபாய நிலையில் கிராம மக்கள்
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட ஒட்டுசுட்டான் - சின்னச்சாளம்பன் கிராமத்தில் மக்கள் உயிரிழந்தவர்களின் உடலங்களை கொண்டுசெல்வதற்கு ஆற்றினை கடந்து கொண்டுசெல்லவேண்டிய அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களில் முக்கியமானது பிரதேச சபையின் ஆழுகையின் கீழ் உள்ள பகுதிகளில் மயானங்களை அமைத்துக்கொடுத்தல் மற்றும் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தலாகும்.
இந்த நிலையில் சின்னச்சாளம் கிராமத்தில் மயானம் இருந்தும் அங்கு உயிரிழந்தவர்களை எரிப்பதற்கான எந்த வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்கவில்லை என மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
சரியான பாலம் ஒன்று இன்மை
பிரதேச சபையின் இவ்வாறான செயற்பாட்டினால் மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்.
கிராம மக்கள் சின்னச்சாளம்பன் இந்து மயானத்திற்கு செல்லும் ஒரு கிலோமீற்றர் தூரம் கொண்ட வீதியில் சரியான பாலம் ஒன்று அமைக்கப்படவேண்டும் என பலதடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் அந்த பாலம் அமைப்பதற்கு குறித்த காலத்தில் ஆட்சியில் இருந்து புதுக்குடியிருப்பு பிரதேச சபையினால் 5 இலட்சம் ரூபா செலவில் நடந்து செல்வதற்கு ஏற்றவகையில் சிறிய பாலத்தினை அமைத்துள்ளார்கள்.
மயானத்திற்கு செல்லும் வீதியில் ஆறு ஒன்றினை கடக்கவேண்டிய தேவை உள்ளது. இந்த ஆற்றினை கடப்பதற்கு அமைக்கப்பட்ட பாலத்தினால் இறுதி ஊர்வலம் செல்ல முடியாத நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள மழைவெள்ளத்தினால் ஆற்றினை கடந்து செல்லவேண்டிய அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
சரியான மயானமும், பாலமும் அமைக்கப்படாத நிலையில் இந்த அவல நிலைக்கு சின்னச்சாளம் கிராம மக்ககள் தள்ளப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினர் கவனத்தில் எடுத்து மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக காணப்படும்.
மேலும், மயானத்தினையும், அங்கு செல்வதற்கான வீதியினையும் புனரமைத்து தரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.






