மக்களுடைய காணிகள் மக்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும் - ஆளும் தரப்பு தெரிவிப்பு
மக்களுக்குச் சொந்தமான நிலத்தை மக்களுக்கும், விகாரைக்குச் சொந்தமான நிலத்தை விகாரைக்கும் பிரித்துக் கொடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
அத்துடன் தையிட்டி காணி விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தற்போது விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றதெனவும் குறிப்பிட்டுள்ளார்.
தையிட்டி விவகாரம்
மேலும் தெரிவிக்கையில்,
அனைத்து தரப்பினரையும் அழைத்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். குறிப்பாக, நீதி அமைச்சர், வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்றொழில் அமைச்சர், ஆளுநர், மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் நாடாளுமன்றத்திற்கும் எமது அமைச்சுக்கும் பலமுறை அழைத்து இந்தப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம்.
அத்துடன் அந்தப் பகுதியின் காணி உரிமையாளர்களான மக்களையும் நாங்கள் நேரில் சந்தித்துப் பேசினோம். இந்தப் பேச்சுவார்த்தைகளின் விளைவாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு காணி அளவீட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காக அனைத்து அதிகாரிகளும் வலிகாமம் - தையிட்டி பகுதிக்குச் சென்றனர்.

ஆனால் அங்கு ஏற்பட்ட சிறிய சிக்கல் காரணமாக அதை முழுமையாகச் செய்ய முடியாமல் போனது. எங்களின் நோக்கம் என்னவென்றால், இந்தச் சிக்கல்கள் அனைத்தையும் தீர்த்து, காணி உரிமையாளர்களான எமது மக்களுக்குச் சொந்தமான காணிகளை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே ஆகும்.
அதேநேரம், 1972ஆம் ஆண்டின் காணி அளவீட்டு ஆவணங்களிலேயே இந்த விகாரை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. விகாரையின் ஜின்தோட்ட நந்தாராம நாயக்க தேரர் மிகவும் தெளிவான புரிதலோடு இருக்கிறார்.
அரசியல் சுயநலன்கள்
அந்தப் பகுதி மக்களோடு இணைந்து, மிகவும் நல்லிணக்கத்தோடு பணியாற்றக்கூடிய ஒரு மத குருவாக அவர் உள்ளார். நாங்கள் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்த விரும்பவில்லை.
மக்களுக்குச் சொந்தமான நிலத்தை மக்களுக்கும், விகாரைக்குச் சொந்தமான நிலத்தை விகாரைக்கும் பிரித்துக் கொடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். மிக விரைவில் எமது அதிகாரிகளுடன் மீண்டும் அப்பகுதிக்குச் செல்வோம்.

இரு தரப்பினரிடையேயும் உண்மையான நல்லிணக்கம் ஏற்கனவே நிலவுகிறது. அரசியல் காரணங்களுக்காகவும் சுயநல அரசியல் தேவைகளுக்காகவுமே அங்கு நல்லிணக்கம் இல்லை என்பது போன்ற தோற்றம் சித்தரிக்கப்படுகிறது.
அந்த அரசியல் சுயநலன்களுக்குப் பலியாகாமல், எமது மக்களுக்குரிய காணிகளையும் விகாரைக்குரிய காணிகளையும் சரியாக அளவீடு செய்து, உரிய ஆவணங்களை மக்களிடம் ஒப்படைப்பதே எமது திட்டமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வு பிரச்சனைக்காக போராடும் மாணவர்களுக்கான நடிகர் சூர்யா எடுத்த முடிவு... என்ன தெரியுமா? Cineulagam
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam