பாடசாலை நிர்வாகத்தின் அசமந்த போக்கை கண்டித்து கோரிக்கை முன்வைத்த மக்கள்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தரும்படி, பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
முல்லைதீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட பின் தங்கிய கிராமங்களை உள்ளடக்கிய வகையில் காணப்படும் வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில், தற்போது 940க்கும் மேற்பட்ட மாணவர்கள் கவ்வி கற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்படும் கற்றல் செயற்பாடுகள்
இந்த நிலையில், குறித்த பாடசாலையில் பல்வேறு வளப் பற்றாக்குறைகள் காணப்படுவதால், அங்கு கல்வி கற்கும் மாணவர்களுடைய கற்பித்தல் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கடந்த காலங்களில் க.பொ.த சாதாரன தரம் மற்றும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றில் 77 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட பாடசாலை, தற்போது 50 சதவீதத்திற்கும் குறைவான பெறுபேறுகளை பெற்று வருகிறது.
இதற்கு, பாடசாலையின் கல்வி செயற்பாடுகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படாதது தான் காரணம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், தகுதியான அதிபர் ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்களின் முறைப்பாடுகள்
தற்போது கடமையில் உள்ள அதிபர் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் கோட்டக்கல்வி அலுவலகம், வலயக் கல்விப் பணிமனை அலுவலகம், மாகாண கல்வி அமைச்சு, வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதையும் இங்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, பாடசாலை மாணவர்கள் அவர்களுடைய சுகாதாரப் பொதிகளை பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்பட்ட வவுச்சர் வழங்கலில் முறைகேடுகள் இடம்பெற்று இருக்கின்றன.
குறித்த முறைகேடுகள் தொடர்பாக ஏற்கனவே முறைப்பாடுகள் செய்துள்ள போதும், அதற்கான எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என கவலை வெளியிட்டுள்ளனர்.
அதே சமயம், பாடசாலையில் மாணவர்களுக்கான மேலதிக கற்றல் செயல்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதில்லை என்றும் குறிப்பாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்களுக்கான வகுப்புகளும் நடத்தப்படவில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனவே, பின்தங்கிய மாணவர்களின் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு குறைபாடுகளை சீர் செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.