வற் வரிக்கு எதிராக மக்கள் மீளவும் போராடுவார்கள் : தர்மலிங்கம் சுரேஸ்
வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மீண்டும் போராடுவார்கள் இதனால், மீளவும் ஒரு அரக்கல உருவாகும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலயத்தில் நேற்று (05.01.2024) இடம்பெற்ற படுகொலை செய்யப்பட்ட குமார் பொன்னம்பலத்தின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தலில் கலந்து கொண்டு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
படுகொலை செய்யப்பட்டார்கள்
”சிங்கள தேசம் தமிழ் மக்களது போராட்டம் ஒரு பயங்கரவாத போராட்டம் என இந்த உலகத்துக்கு தெரிவித்து வந்த காலப்பகுதியிலே தமிழ் மக்களுடைய ஆயுத போராட்டம் நியாயமான போராட்டம் என குமார் பொன்னம்பலம் சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தினார்.
இதனால், சிங்கள தேசத்தினால் 2000 ஆம் ஆண்டு சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்திலே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
வடக்கு கிழக்கில் இளைஞர் யுவதிகள் சிங்கள பௌத்த தேசியவாதத்தினால் மிக மோசமாக தாக்கப்பட்டு கைது செய்து சிறைகளிலே அடைக்கப்பட்டார்கள். ஏன் படுகொலையும் செய்யப்பட்டார்கள். சிலர் எவ்விதமான ஆதாரங்களும் இன்றி பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டனர்.
பசில் நாடு திரும்பியதும் ஆரம்பமாகவுள்ள நடவடிக்கை : ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மொட்டு வெளியிட்டுள்ள அறிவிப்பு
இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பல இளைஞர்களை நீதிமன்றில் வாதாடி குமார் பொன்னம்பலம் மீட்டெடுத்தார்.
காணி அபகரிப்பு
இன்று அவருடைய மகன் கஜேந்திரகுமார் அதே நேர்மையுடன் தமிழ் தேசிய உணர்வுடனும் தமிழ் மக்களுக்காக செயற்பட்டு வருகின்றார்.
கஜேந்திரகுமார் அணியைச் சேர்ந்த நாங்கள் அவரது வழிகாட்டலிலே தமிழ் மக்களுக்கு எங்கே அநீதி அநியாயம் நடக்கின்றதோ அங்கு நாங்கள் சென்று அதனை ஆராய்ந்து பிரச்சனையை உலகத்திற்கு தெரியப்படுத்தி வருகின்றோம்
கிழக்கு மாகாணத்திலே எம் மக்களது ஏராளமான காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலைமையில் தமிழர்கள் இலங்கையில் இருக்க முடியாத சூழ்நிலையை சிங்கள பௌத்த தேசியவாதம் ஏற்படுத்துகின்றது என்பதை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆணித்தரமாக உலகிற்கு தெரியப்படுத்தி வருகின்றது.
தமிழர் தேசம் அங்கீகரிக்கும்
தமிழர்களின் தேசம் அங்கீகரிக்கும் சரியான தலைமைத்துவத்தின் குரல் ஓங்கி ஒலிக்கவேண்டும்.
இதே நிலையில், தமிழ் மக்கள் பிரதிநிதிகள் உறுதியான தலைமைத்துவத்தின் வழியிலே பெரும்பாலனவர்கள் நாடாளுமன்றில் இருப்பார்களாயின் உலகம் குறித்த தலைமைத்துவத்தின் கதையைத்தான் கேட்கும்.அந்த இடத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி அடையும். அடுத்த தேர்தலில் வடக்கு கிழக்கிலே ஆகக்கூடிய ஆசனங்களை எமது கட்சி பெறும்.
நாடு வறுமை கோட்டு நிலையில் போய் கொண்டிருக்கும் வேளை மக்கள் அந்த நிலையினை தாக்குப்பிடிக்க முடியாது குறிப்பிட்ட வருமானத்துக்குள் வாழ்கையை கொண்டு நடாத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.
இதில் புதிதாக 18 வீதமாக வற் வரி விதிக்கப்பட்டுள்ளது. ராஜபக்ஷ அரசை மக்கள் எவ்வாறு துரத்தியடித்தார்களோ அவ்வாறு வற் வரி விதிப்புக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |