பசில் நாடு திரும்பியதும் ஆரம்பமாகவுள்ள நடவடிக்கை : ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மொட்டு வெளியிட்டுள்ள அறிவிப்பு
இந்த ஆண்டு கட்டாயம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச நாடு திரும்பியதும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்றையதினம்(05) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ரணிலுக்கு ஆதரவா..?
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசியலமைப்பின் பிரகாரம் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும். நாடளாவிய ரீதியில் வெகுவிரைவில் அரசியல் கூட்டங்களை நடத்துவோம். பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச நாடு திரும்பியவுடன் பொது கூட்டங்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்.
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் என்று ஆளும் தரப்பின் ஒருசிலர் குறிப்பிடுவது அவர்களின் தனிப்பட்ட நிலைப்பாடே தவிர கட்சியின் நிலைப்பாடல்ல.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சகல தரப்பினருடன் வெளிப்படையான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். பொருளாதார நெருக்கடிக்கு தீரவு காணும் வகையில் மக்களால் ஏற்றுக் கொள்ளும் நபரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்.
ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு அரசியல் கூட்டணிகள் தற்போது தோற்றுவிக்கப்படுகின்றன.கட்சி தாவல்களும் இடம்பெறுகின்றன. 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாறான தன்மை காணப்பட்டது.
கட்சி தாவல் என்பது இங்கு இயல்பானதாக உள்ளது. கட்சி என்ற ரீதியில் பலமாக உள்ளோம். ஐக்கிய மக்கள் சக்தியுடன் தற்போது கூட்டணியாக இணைந்துள்ள பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கடந்த காலங்களில் சகல அரசியல் கட்சிகளிலும் அங்கம் வகித்துள்ளார். நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் பலர் எம்முடன் இணைவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |