மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக முள்ளியவளையில் திரண்ட மக்கள்!
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதரணமான சூழ்நிலைக்கு காரணமான ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளுக்கு நாள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்ற வேளையில் அதற்கு வலுச்சேர்க்கும் விதமாக முல்லைத்தீவு மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இப்போராட்டமானது இன்று(23) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
”ராஜபக்ச குடும்ப ஆட்சியில் நாடு கொள்ளையிடப்பட்டு அவல நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது அத்திய அவசிய பொருட்களின் விலையேற்றம், எரிபொருட்களின் விலையேற்றம், தட்டுப்பாடு, இரசாயனப்பசளைகளை இல்லாமல் செய்தமை, சீமெந்தின் விலையேற்றம், சமையல் எரிவாயு இன்மை மற்றும் விலையேற்றம், நாளாந்தாம் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக” பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக இருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணியானது “கோட்டாபய ஆட்சியினை ஒப்படைத்துவிட்டு வீடு செல்” என கோசங்களை எழுப்பியும், பதாதைகளை தாங்கியவாறும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள்.
இதன்போது மதகுருமார்கள், சிவில்சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள், முச்சக்கரவண்டி சங்கத்தினர், வணிகர்கள் முன்னாள் வடமாகாணசபை விவசாய அமைச்சர் க.சிவனேசன், உள்ளிட்ட பிரதேசசபை உறுப்பினர்கள் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



