நீதி இல்லாத நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு..! செம்மணி புதைகுழி விவகாரத்தில் போராட்டத்தில் குதித்த உறவுகள்
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்காக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார விஜயம் செய்துள்ள நிலையில், “நீதி இல்லாத நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு?” என்ற தொனிப்பொருளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டமானது, இன்று (19.06.2026) ஏ - 9 பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
கொந்தளிப்புடன் களத்தில் இருந்த உறவுகள்
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்போது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பிரதானிகள் ஆகியோர், செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதிக்கு இன்று(19) நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
அமைச்சரின் இந்த வருகையை முன்னிட்டு, இன்று(19) 2 மணி முதல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சித்துப்பாத்தி இந்து மயானத்தின் முன்றலில், ஏ - 9 வீதியை மறித்துத் தமது கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
நீதி இல்லாத நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு?
போராட்டக்காரர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பித் தமது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, "நீதி இல்லாத நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு?", "செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகளுக்குச் சர்வதேச மேற்பார்வை வேண்டும்", "உள்ளகப் பொறிமுறைகளில் எமக்கு நம்பிக்கை இல்லை" மற்றும் "சர்வதேச விசாரணையே இறுதித் தீர்வு" உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீதி அமைச்சரின் வருகை மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் விசாரணைகள் வெறும் கண் துடைப்பு நடவடிக்கை என்று சுட்டிக்காட்டியுள்ள போராட்டக்காரர்கள், தமக்கு உள்நாட்டுப் பொறிமுறைகளில் துளியும் நம்பிக்கையில்லை என்றும், சர்வதேச சமூகத்தின் நேரடித் தலையீடும் விசாரணையுமே தமக்கான நீதியைப் பெற்றுத் தரும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.


புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan