கடைத்தொகுதியை சமூர்த்தி பயனாளிகளுக்கு வழங்க கோரி மக்கள் போராட்டம் (Photos)
கொட்டகலை - பத்தனை சந்தியில் அமைந்துள்ள கடைத்தொகுதியை சமூர்த்தி பயனாளிகளுக்கு வழங்க கோரி மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டம் கொட்டகலை பிரதேச சபையின் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் சுப்ரமணியம் ராஜா தலைமையில் இன்று (18) இடம்பெற்றுள்ளது.
மக்களின் கோரிக்கைகள்
போராட்டம் தொடர்பில் மக்களின் கருத்து தெரிவிக்கையில், “பிரதேசத்தில் எமக்கே தெரியாமல் யாரோ கடைத்தொகுதியை அமைத்துள்ளனர். இது தொடர்பாக சில ஊடகங்களில் முழு விபரங்களுடன் கட்டுரை ஒன்று வெளிவந்திருந்தது. அதற்குப்பிறகே இது மக்கள் பயன்பாட்டிற்கு ஆரம்பிக்கப்பட்டதென்ற விபரம் தெரியவந்துள்ளது.
எனவே தனிநபர்களால் இவ் இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை தெளிவாகியுள்ளது. இதை மக்களுக்கே வழங்க வேண்டும் எனக் கோருகிறோம். எம்மால் சமூர்த்தி சேவைகளைப் பெற தலவாக்கலை வரை பயணிக்க முடியாது.” என்று விசனம் தெரிவித்துள்ளனர்.
கட்டிடத்துக்கு எவருக்கும் அனுமதி வழங்கவில்லை
அத்துடன், இவ் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கிய பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ராஜா கருத்து தெரிவிக்கையில், “இந்த கட்டிடம் அமைந்ததன் பின்னணியில் பல ஊழல்கள் அரங்கேறியுள்ளன.
இது குறித்து நான் கடந்த இரண்டு வருடங்களாக கேள்வி எழுப்பியும் கொட்டகலை பிரதேச சபை தவிசாளர் சரியான பதில்களை எனக்கு வழங்கவில்லை. தமக்கும் இந்த கட்டிடத்துக்கும் சம்பந்தமில்லை என்கிறார்.
அருகிலுள்ள ஆலய நிர்வாக சபையினால் இது 2008 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது என்கிறார். இந்த ஆலயத்துக்கு அப்படி ஒரு நிர்வாக சபையே கிடையாது. ஏனென்றால் நான் இந்த பகுதியை சேர்ந்த உறுப்பினர்.
2008 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அனுமதிக்கு எவ்வாறு 2022 ஆம் ஆண்டு கட்டிடம் கட்ட முடியும்? தனது நிர்வாக எல்லைக்குள் இருக்கும் பகுதியில் ஒரு கட்டிடம் எழுவதை எவ்வாறு பிரதேச சபை நிர்வாகம் பார்த்துக்கொண்டிருந்தது? இதன் பின்னணி சூழ்ச்சி வெளிக்கொண்டு வர வேண்டும். இது மக்களுக்கு சேர வேண்டியது. சரியான பதில்கள் எமக்குக் கிடைக்காவிடின் எமது போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாத் கருத்து தெரிவிக்கையில், “கொட்டகலை பிரதேச சபை 2018 ஆம் ஆண்டு தான் ஆரம்பிக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு நுவரெலியா பிரதேச சபையினால் குறித்த ஆலய நிர்வாகத்துக்கு கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்நேரம் நிதி இல்லாத காரணத்தினால் இப்போது கட்டப்பட்டிருக்கலாம். நாம் இந்த கட்டிடத்துக்கு எவருக்கும் அனுமதி வழங்கவில்லை. எம்மிடம் எவரும் அனுமதி பெறவும் இல்லை. இது குறித்து வாய் மூலமும் எழுத்து மூலமும் கேள்வி எழுப்பிய அனைவருக்கும் பதில்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால் நுவரெலியா பிரதேச சபையால் வழங்கப்பட்ட அனுமதியின் படி கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. நாம் இது குறித்து ஆலய நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளோம். அவர்கள் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர். இந்த திட்டத்தை புதுப்பிக்கும் படி கோரியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார் .





ட்ரம்பால் 25 பில்லியன் டொலர் வருவாயை இழக்கும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள ஆசிய நாடொன்று News Lankasri
