மக்கள் இனியும் மொட்டுக் கட்சியினரிடம் ஏமாறுவதற்குத் தயாரில்லை: ஹேஷா விதானகே
மக்கள் இனியும் மொட்டுக் கட்சியினரிடம் ஏமாறுவதற்குத் தயாரில்லை, அவர்கள் விழிப்புடன் இருக்கின்றார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளர்.
ஊடக சந்திப்பொன்றில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், மொட்டுக் கட்சியினர் இன்னும் அவர்களின் இயலாமையை ஒத்துக்கொள்ளாமல் மேலும் மேலும் பொய்களைச் சொல்லிக்கொண்டு அரசியல் செய்கின்றனர்.
அரசியல் முறை
நேர்மையாக அரசியல் செய்ய முடியாவிட்டால் அரசியலில் இருந்து ஒதுங்கிவிட வேண்டும். அப்படிச் செய்யாது மக்களை ஏமாற்றும் வேலையை அவர்கள் செய்து வருகின்றனர்.
மக்கள் இனியும் ஏமாறுவதற்குத் தயாரில்லை. மக்கள் விழிப்புடன் இருக்கின்றார்கள். அவர்கள் சரியான தலைவர்களுடன் பயணிக்க விரும்புகின்றார்கள். இதை மொட்டுக் கட்சியினரிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள்
2022 மிகவும் மோசமான வருடம். 2023 இல் மீண்டெழுவதற்கு மக்கள் முயற்சி செய்ய வேண்டும். இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின் ஜேர்மனி , ஜப்பான் போன்ற நாடுகள் எழுந்து நின்றது போல் எம்மாலும் எழுந்து நிற்க முடியும்.
ஆனால், மக்கள் இந்தப் பொய்யர்களை திருடர்களை விரட்டி விட்டு சரியான தலைவர்களுடன் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். 2023 தேர்தல்களைச் சுமந்த வருடம்.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் நிறைந்த வருடம். மக்கள் இதைச் சரியாகப் பயன்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.