5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவில்லையென மக்கள் கவனயீர்ப்பு
இன்றைய தினம் கோவிட் கொடுப்பனவு வழங்கப்படவில்லை என தெரிவித்து அராலி மத்தி J/161 கிராம சேவகர் பகுதி மக்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் கருத்து கூறுகையில்,
நாங்கள் அன்றாடம் வேலைக்கு சென்று உழைத்துச் சாப்பிடும் கூலித் தொழிலாளிகள். எமக்கு இதற்கு முதல் புது வருடத்திற்கு கொடுத்த 5,000 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படவில்லை.
தற்போது வழங்கப்படும் கோவிட் கொடுப்பனவும் வழங்கப்படவில்லை. சமுர்த்தி பயனாளிகளுக்கு தான் இந்த கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி முத்திரைக் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.
அத்துடன் கோவிட் கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது. தற்போது வேலைக்கு செல்ல முடியாமல் நாங்களும் கஷ்டத்தின் மத்தியில் தான் வாழ்க்கையை நடாத்துகின்றோம். நாங்கள் சாப்பாட்டிற்கு என்ன செய்வது? அத்துடன் எங்களது குடும்ப அட்டைகளை சமுர்த்தி மற்றும் கிராம சேவகர் வாங்கி வைத்துவிட்டு நேற்றைய தினம் திருப்பி எங்களிடம் தந்துள்ளனர்.
அந்த குடும்ப அட்டையில் மேலும் ஒரு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டதாக திகதி போடாமல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் எமது கையெழுத்தை ஒத்த கொயெழுத்தும் வைக்கப்பட்டுள்ளது.
சிலரது குடும்ப அட்டையில் மேலதிகமாக பதிவு செய்த 5,000 ரூபா பேனாவினால் வெட்டப்பட்டுள்ளது. சிலரது குடும்ப அட்டையில் அது வெட்டப்படவில்லை. எங்களது கையெழுத்து போல கையெழுத்து எமது குடும்ப அட்டையில் எவ்வாறு வந்தது என உத்தியோகத்தர்களை நாங்கள் வினவியபோது அது தவறுதலாக நிகழ்ந்துள்ளது என பொறுப்பற்ற விதத்தில் பதில் கூறுகின்றனர். எனவே உரியவர்கள் இதனை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
