அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட விவசாய காணிகள்! தொடர் போாட்டத்தில் முத்து நகர் மக்கள்
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பகுதியை சேர்ந்த சுமார் 352 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது விவசாய நிலத்தை இழந்து தற்போது வரை போராடி வருகின்றனர்.
1972 தொடக்கம் விவசாய செய்கையில் ஈடுபட்டு வந்த போது இலங்கை துறைமுக அதிகார சபையினர் தங்களது காணிகள் என பதாகைகளுக்கு பெயரிட்டு 2023ல் இருந்து அப்பகுதி மக்களை வெளியேறுமாறு அச்சுறுத்தினர்.
இந்நிலையில் முத்து நகர் மக்கள் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக விவசாய செய்கையை வாழ்வாதாரமாக செய்து வந்த போதிலும் தற்போதைய அரசாங்கம் தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின் சக்தி உற்பத்திக்காக 200ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களை வழங்கி விவசாயிகளை விவசாயம் செய்ய விடாது வெளியேற்றியுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.
மொத்தமாக 800 ஏக்கரளவில் குறித்த பகுதி விவசாய காணி கபளீகரம் செய்யப்பட்டுள்ளது.
சோளர் திட்டம்
இவ்வாறான நிலையில் பல போராட்டங்களை நடாத்திய போதும் விவசாயிகளுக்கு தீர்வின்றி சோளர் திட்டத்துக்கான வேலைகளை தனியார் கம்பனிகள் தற்போது ஆரம்பித்துள்ளனர்.
தொடர்ச்சியாக இது விடயமாக போராடிய போது திருகோணமலை நீதிமன்றத்தால் 22விவசாயிகளுக்கு பெயர் குறிப்பிட்டு உள்ளே செல்ல முடியாத தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .
இதனால் விவசாயிகள் நொந்து விடாது தங்கள் நிலத்தை மீளப் பெற தொடர் போராட்டங்களை நடாத்தினர். ஒரு முறை பெகோ இயந்திர வேலைகளுடன் விவசாய காணிக்குல் சென்று தடுத்து நிறுத்த முற்பட்ட போது கருத்து முரண்பாடு ஏற்பட்ட நிலையில் விவசாயிகளை தனியார் நிறுவன இயந்திர அடியாட்கள் தாக்கியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனால் அப்பாவி விவசாயிகள் சுமார் ஐந்து பேரை சீனக் குடா பொலிஸார் கைது செய்தனர் பின்னர் 14 நாட்கள் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
விடுதலைக்காகவும் கைதை கண்டித்தும் சீனக் குடா பொலிஸ் நிலையம் முன்பாகவும் குறித்த விவசாய குடும்பங்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். நீதியை நிலை நாட்டவும் நில உரிமைகளை பெற கோரியும் உரியவர்களை வலியுறுத்தினார்கள்.
இதனை தொடர்ந்து தொடரான தீர்வில்லாத நிலையில் திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக இன்றுடன் 15 ஆவது நாளாக (2025.10.01) சத்தியாக் கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனோடு இணைந்து கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகம் முன்பாக 24.09.2025 அன்று போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
எட்டாவது நாளில் கவனயீர்ப்பு
இவ்வாறான நிலை குறித்து முத்து நகர் விவசாய சம்மேளன செயலாளர் சஹீலா சபூர்தீன் தெரிவிக்கையில்
"கடந்த ஒன்பது நாட்களாக இன்றுடன் (25.09.2025) திருகோணமலை கச்சேரிக்கு முன்னால் சத்தியாக் கிரகப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
எட்டாவது நாளில் கவனயீர்ப்பில் திருகோணமலையில் ஒரு பகுதியினரும் 120க்கும் மேற்பட்டோர்கள் கொழும்பு பிரதம மந்திரி அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.
கடந்த காலத்தில் இரு முறை ஜனாதிபதி செயலகம் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் செய்து மனு கொடுத்திருந்தோம்.ஜனாதிபதி செயலகத்தில் இரு செயலாளர்களை சந்தித்த போது அவர்கள் கூறியதாவது ஓகஸ்ட் 30ம் திகதிக்குள் உங்களுக்கு நல்லதொரு தீர்வை தருவோம் என்று.
அதன் படி காத்திருந்து எங்களுக்கு இது வரை எந்த பதில்களும் கிடைக்கவில்லை . இனி மேல் நாங்கள் திருகோணமலை கச்சேரியில் கவனயீர்ப்பில் ஈடுபட்ட போது சாதகமான பதில்கள் எட்டாமையால் தான் நாங்கள் கொழுப்பு சென்றோம்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எங்களை மாலை 5.30 மணியளவில் அங்கு அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் எங்களுடன் பேசினார்கள் பிரதமர் நாடாளுமன்றில் இருப்பதாக தெரிவித்தனர்.
பிரதமரின் செயலாளரை சந்தித்து பேசினோம் எங்கள் பிரச்சினைகளை ஐந்து பேர் கொண்ட குழுவுடன் ஆனாலும் பிரதமரை சந்திக்க வேண்டும் என்பதற்காக இரவு 9.30 மணி வரை காத்திருந்தோம்.
200 ஏக்கர்
அரை மணித்தியாலயம் பொறுத்திருங்கள் என அதிகாரிகள் கூறினர். மேலும் மூவருக்கு உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது அதில் நானும் சென்றேன்.
பிரதமரை சந்தித்து விவசாயிகளான எங்கள் முத்து நகர் நிலம் சூரையாடப்பட்டமை தொடர்பாக தெளிவுபடுத்தியிருந்தோம்.
விவசாயிகளுக்கு 800ஏக்கர் நிலமும் குளத்துடன் திருப்பி வழங்கப்பட வேண்டும் எனவும் இதனோடு ஒரு விடயத்தை அறிந்து கொள்ள வாய்ப்பு கிட்டியது மூன்று கம்பனிகள் ஒப்பந்தம் செய்துள்ளதாக இருந்த போதிலும் மீதமுள்ள பகுதிகளை விவசாயம் செய்ய விடுவித்து தருமாறும் கோரிக்கையினை முன்வைத்தோம்.
ஜூலை 23ல் மாவட்ட செயலகம் முன் இடம் பெற்ற போராட்டத்தின் போது வெளிவிவகார பிரதியமைச்சர் 10வீத நிலத்தை வழங்கியுள்ளதாகவும் எஞ்சிய நிலத்தை விவசாயிகளுக்கு வழங்கவுள்ளமை தொடர்பில் கூறியிருந்தார்.
ஆனால் இன்று விவசாயிகளின் நிலை 200ஏக்கருக்கு மேல் கம்பனிகளுக்கு வழங்கப்பட்டு முத்து நகர் குளம்,தகரவெட்டுவான் குளம் மூடப்பட்டுள்ளது.
பின் பகுதி இயந்திரத்தை கொண்டு இடித்து அழித்து வருகின்றனர் அங்கு செல்ல முடியாது எனவும் கூறினோம். உப்புவெளி கமநல சேவைகள் அதிகாரிகளுடனான கூட்டத்தில் மூன்று சம்மேளனங்களில் உள்ளவர்கள் 800 ஏக்கரில் விவசாயம் செய்ய முடியாது பெரும்போக நஷ்ட ஈடு தரப்படும் என கூறினார்கள்.
இதனை பிரதமரிடம் ஒட்டு மொத்தமாக எடுத்துரைத்தோம் இதற்கு பதில் அளித்த பிரதமர் இது தொடர்பில் தனக்கு தெரியாது என மீண்டும் நாங்கள் கூறியதாவது பத்து நாட்களுக்குல் தீர்வு வழங்க வேண்டும் என கூறினோம்.
இவ்வாக்குறியை ஏற்ற பிரதமர் தீர்வை உரிய அதிகாரிகளுடன் பேசி பெற்று தருவதாக கூறினார்.
இந்த அனைத்துக்கும் முடிவாக பிரதமரிடம் மீண்டும் நாங்கள் கூறியதாவது சாதகமான தீர்வொன்றை தராத பட்சத்தில் பிரதமர் அலுவலகம் அல்லது ஜனாதிபதி செயலகம் முன் சத்தியாக் கிரக போராட்டத்தை திருகோணமலையில் இருந்து வந்து தொடர்வோம் தொடர்ந்தும் போராடுவோம் என தெரிவித்தோம்” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



