நாட்டின் நிலைமை குறித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆராய்வு
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உயர்மட்ட குழுவினரின் கூட்டமொன்று கட்சியின் தலைமை செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண அரசியல் சூழ்நிலை தொடர்பாகவே நேற்று(14) கூடி ஆராய்ந்துள்ளனர்.
நாடாளுமன்றத்தை பிரயோகப்படுத்தும் கட்சிகள் வரிசையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியும் ஒரு ஆசனத்தை பெற்றிருக்கின்றது.
அந்த வகையில் எதிர்வரும் ஒரு சில தினங்களில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் அவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூடி எடுக்கப்போகின்ற தீர்மானமானது தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

இடம்பெற்ற ஆய்வுகள்
நாட்டின் அதிகார மையங்களான பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவிகளின் தேர்வுகள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள், அவற்றை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியானது எப்படியான அணுகுமுறையுடன் கையாள வேண்டும்? எப்படியான நிலைப்பாடுகள் எடுக்கப்பட வேண்டும்? என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆராயப்பட்டதாக தெரியவந்துள்ளது.
நாட்டின் எதிர்காலம் தொடர்பாக ஸ்திரமான அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க வேண்டியதன் அவசியம் மற்றும் அத்தகைய அரசியல் அதிகாரத்தில் கிழக்கு மாகாண தமிழர்களின்
வகிபாவத்தை உறுதி செய்யும் இலக்கு போன்றவற்றை கருத்தில் கொண்டு கட்சியின் நிலைப்பாடுகள் அமைய வேண்டுமென்று தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட்டதாக
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன், தலைவர் பணி குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற பிரதிநிதிகள், மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.