36 ஆண்டுகளாக சொந்த நிலத்தை இழந்து போராடும் மக்கள்
நாம் எமது சொந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, இன்றுடன் 36 வருடங்கள் நிறைவடைந்தும் நாம் அகதிகளாகவே வாழ்கின்றோம் என மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்தி குழு தெரிவித்துள்ளது.
தம்மை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறு கோரி மாவட்ட செயலகம் முன்பாக இன்றையதினம்(15.06.2026) போரட்டத்தை முன்னெடுத்த பின் ஜனாதிபதிக்கு மாவட்ட செயலர் ஊடாக கையளித்த மனுவில் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களின் காணிகள்
குறித்த மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யுத்தம் நிறைவடைந்து 17 வருடங்கள் முடிந்து விட்டது.
எமைப் போல் பாதிக்கப்பட்டவர் ஒரு விடுதலை தோழர் அரசாங்கத்தை நடாத்த வந்தார். எம் ஆதரவை மனநிறைவோடு வழங்கினோம்.

மனம் நிறைவான பேச்சுக்கள் உறுதி மொழிகள் தந்தார். ஆனாலும் அவர் அரசிலும் நாம் அகதிகள்? ஜனாதிபதியே, அமைச்சர்களே நாடாளுமன்ற உறுப்பினர்களே, ஆளுநரே, மாவட்ட செயலரே அதிகாரிகளே இராணுவ தளபதிகளே எங்கள் நிலையை பாருங்கள்.
உயர் பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட இல.1810 என்று இலக்கம் கொண்ட 2013 இல் வெளியிடப்பட்ட வர்த்தமானியை நீக்குங்கள்.
மக்களின் காணிகளை மக்களுக்கு கொடுப்பீர்கள். அகதிகள் என்ற பதமே இல்லாமல் எங்கள் நாடு என்று நாமும் வாழுவோம் அதற்காக மீண்டும் நாம் வேண்டுகின்றோம்.
நிலத்தை மீட்பதற்காக
உயர்பாதுகாப்பு (2013ம் ஆண்டு இல.1810) என்ற வர்த்தமானி நீக்கப்பட வேண்டும் மக்களின் காணிகளை மக்களுக்கு கொடுக்க வேண்டும்.
முதற்கட்டமாகவாவது ஆலயங்கள், பாடசாலைகள், தொழிற்சாலைகள், சேமக்காலைகள், விவசாய நிலங்கள், கடற்தொழில் இடங்கள் விடவேண்டும்.

அறவழியில் போராடும் எமது போராட்டத்தை மதித்து எமது கோரிக்கையை எல்லோருமாக இணைந்து நிறைவேற்றுங்கள்.
முதலாவதாக 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி (இல.1810) முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
அடுத்து மயிலிட்டியில் தொடர்ச்சியாக நிலம் மீட்பதற்காக அறவழியில் போராடி வரும் J/248, J/251, J/255, J/246 கிராம சேவையாளர் பிரிவில் மக்களின் காணிகள் முதற்கட்டமாக விடுவிக்கப்படவேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.