பாதுகாப்பின் உச்சத்தில் பாரிஸ் நகரம்: அவசரமாக வெளியேற்றப்படும் பொதுமக்கள்
பாரிஸ் நகரில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், லூவ்ரே மற்றும் வெர்சாய்ஸ் அரண்மனை பகுதிகளில் இருந்து பார்வையாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அது மட்டுமின்றி, Gare de Lyon தொடருந்து நிலையத்தில் இருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய பாரிஸ் நகரம் முழுவதும் உயர் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை
இந்நிலையில் நேற்றைய தினம் பாடசாலை ஒன்றில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தை அடுத்தே நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், லூவ்ரே அருங்காட்சியகத்தில் எச்சரிக்கை மணி ஒலிக்க விடப்பட்டதோடு, அதன் சுரங்கப்பகுதி வணிகவளாகத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள.
இதனையடுத்து பார்வையாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் லூவ்ரே நிர்வாகிகள் தரப்பு தெரிவிக்கையில், குறித்த சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து பாரிஸ் நகர பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
அரண்மனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
அத்துடன், அருங்காட்சியகம் மொத்தமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதனிடையே, வெர்சாய்ஸ் அரண்மனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸார் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பாடசாலை தாக்குதல் சம்பவத்தை அடுத்து 7,000 இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக களமிறக்கப்பட்டனர்.
மத அடிப்படைவாதி இளைஞர் ஒருவரால் Dominique Bernard என்ற ஆசிரியர் கத்தியால் தாக்கி கொல்லப்பட்டார்.
பிரான்ஸில் நடந்த கொடூரமான இந்த சம்பவம் தற்போது பிரான்ஸ் பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரினால் பிரான்ஸில் இதுப்போன்ற தாக்குதல் சம்பவங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அஞ்சப்படுகிறது.
20 வயதான தாக்குதல்தாரி ஐ.எஸ் ஆதரவு இளைஞர் எனவும், முகமது என்ற செச்சென் அகதி எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.