24 மணிநேர கெடு விதித்த இஸ்ரேல்: உயிரச்சத்தில் பாலஸ்தீனியர்கள்
பாலஸ்தீனத்தின் காசாவுக்குள் தரைவழியாக நுழைந்து தாக்குதல் நடத்த இஸ்ரேல் இராணுவம் தயாராகி வருவதனால் பதற்றமான சூழல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் காசாவின் வடக்கு பகுதியில் வசிக்கும் 11 இலட்சம் மக்கள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் இராணுவம் காலக்கெடு விடுத்துள்ளது.
இதன் போது 1,200க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகள் தரை, வான் மற்றும் கடல் வழியாக இஸ்ரேலின் தென் பகுதியில் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இத்தாக்குதலில் இதுவரை 1,300 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதுடன் 3,300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் ஏராளமான இஸ்ரேலியர்களை, ஹமாஸ் தீவிரவாதிகள் சிறைபிடித்து சென்றுள்ளனர்.
இஸ்ரேல் போர்
இதற்கு பதிலடியாக ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் போர்தொடுத்தது. இரு தரப்புக்கும் இடையே 7ஆவது நாளாக நேற்று(14.10.2023) கடுமையான சண்டை இடம்பெற்றுள்ளது.
இஸ்ரேலிய பிணைக் கைதிகளை மீட்கவும், ஹமாஸ் தீவிரவாதிகளை அழிக்கவும் காசா பகுதிக்குள் தரைவழியாக நுழைய இஸ்ரேல் இராணுவம் தயாராகி வருகிறது.
இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் இராணுவத்தின் ஒரு லட்சம் வீரர்களும் 100க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தயார் நிலையில் உள்ளதுடன் 300 பீரங்கிகள் காசா பகுதியை நோக்கி முன்னேறி வருவதாக தெரியவருகின்றது.
24 மணி நேர காலக்கெடு
இதேவேளை பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் சுமார் 23 இலட்சம் மக்கள் உள்ளதுடன் காசாவின் வடக்கு பகுதியில் மட்டும் சுமார் 11 இலட்சம் பேர் வசிக்கின்றனர்.
இஸ்ரேல் இராணுவம் வடக்கு பகுதியில் தரைவழியாக நுழைய திட்டமிட்டு உள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய அங்கு வசிக்கும் மக்கள் அடுத்த 24 மணி நேரத்துக்குள் தெற்கு பகுதிக்கு செல்லுமாறு இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது.