மாணவியை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் கைது
நானுஓயாவில் பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் பொலிஸாரால் நேற்று (06) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் இயங்கும் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் பாதிப்படைந்த மாணவி (05) நானுஓயா ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரால் ஆசிரியர் கைது
இந்நிலையில், தாக்குதல் இடம்பெற்று இரண்டு நாட்களின் பின் நானுஓயா பொலிஸாரால் குறித்த ஆசிரியரை கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த ஆசிரியரை இன்று (07) நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆசிரியர் மிருகத்தனமாக தாக்கியதில் மாணவிக்கு அடிகாயங்கள் மற்றும் உட்காயங்கள் ஏற்பட்டு தானாகவே சிறுநீர் கசிவு ஏற்பட்டுள்ளது .
தரம் 08 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு ஆசிரியரால் தாக்கப்பட்டுள்ளார்.
மாணவி வைத்தியசாலையில் அனுமதி
எனினும் (06) வெள்ளிக்கிழமை குறித்த மாணவி பாடசாலைக்கு செல்லவில்லை. தொடர்ந்து தலை வழி ,தலைச்சுற்று குமட்டல் போன்றவை அதிகமாக உள்ளதால் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக பெற்றோர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மாணவி தெரிவித்துள்ளதாவது,
குறித்த ஆசிரியர் வழக்கமாக பாடசாலை மாணவிகளுக்கு தொல்லை கொடுப்பதாகவும், மாணவ, மாணவிகளை தகாத வார்த்தைகளால் திட்டியும் அடித்தும் வந்துள்ளதாகவும் தாக்குதலுக்கு உள்ளான மாணவி தெரிவித்துள்ளார்.

அதுபோலவே (05) ஆம் திகதி என்னிடம் பெற்றோரை கூறி தகாத வார்த்தைகளால் திட்டியும், கடுமையாக கன்னம் மற்றும் செவி பகுதிகளில் தாக்கி இறுதியில் தலையை பிடித்து மேசையில் வைத்து முதுகு பகுதியிலும் ஆசிரியரின் முழங்கையால் தாக்கினார்.
இதனால் வலி தாங்க முடியாமல் எனக்கு சிறுநீர் கசிவும் ஏற்பட்டது. பாடசாலை முடியும் வரை அதே சீருடை மற்றும் பாதனி உடன் வீடு திரும்பினேன் என மாணவி தெரிவித்தார்.
பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவியிடம் பெற்றோர் விசாரித்த போது, நடந்தவற்றை கூறி தனது அடிகாயங்களையும், உட்காயங்களையும் காட்டியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லவும், பொலிஸ் நிலையத்தில் மாணவி மூலம் முறைப்பாட்டை பதிவு செய்யவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஆசிரியர் தொடர்பில் வெளியான தகவல்
இந்நிலையில் குறித்த மாணவியை தாக்கிய ஆசிரியர் இவ்வாறு பல மாணவர்களை பாடசாலையில் காட்டுமிராண்டித்தனமாக தாக்குவது வழமை என்றும், குறித்த ஆசிரியரால் ஏற்கனவே ஒரு மாணவன் மீது தும்புத்தடி கொண்டு தாக்கிய சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக பாடசாலை பெற்றோர் வட்டாரங்கள் மற்றும் பொலிஸாரின் விசாரணை மூலம் அறியமுடிகிறது.
குறித்த சம்பவம் குறித்து நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.