வடை மற்றும் பராட்டாவை சாப்பிட்டு உணவு தேவையை பூர்த்தி செய்யும் மக்கள்
வடை, பராட்டா போன்ற சிற்றுண்டிகளுக்கான கேள்வி பெரியளவில் அதிகரித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உணவகங்களில் உணவுகளை கொள்வனவு செய்யும் பலர் வடை, பராட்டா போன்ற விலை குறைந்த உணவுகளை சாப்பிடுவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கூறியுள்ளார்.
மரக்கறிகளை மாத்திரம் கொண்ட சோறு பொதி ஒன்றின் விலை தற்போது 200 ரூபாவுக்கும் மேல் அதிகரித்துள்ளது. கோழி இறைச்சியுடன் கூடிய சோறு பொதி ஒன்றின் விலை 300 ரூபாயாக அதிகரித்துள்ளது. மீன் கறியுடன் கூடிய சோறு பொதியின் விலை 240 ரூபாவாக அதிகரித்துள்ளது.
சோறு பொதியின் குறைந்தபட்ச விலையை கூட மக்கள் தாங்க முடியாதுள்ளது. சோறு சாப்பிடுவதற்கு பதிலாக சிற்றுண்டிகளை சாப்பிட்டு ஒரு வேளை உணவு தேவையை பூர்த்தி செய்துக்கொள்கின்றனர்.
சாதாரண மக்கள் தமது பசியை போக்கி கொள்ள எப்படியான நெருக்கடிக்குள் விழுந்துள்ளனர் என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது.
கோதுமை மா, தேங்காய் எண்ணெய் உட்பட அத்தியவசிய உணவு பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம். இதன் காரணமாக வடை, பராட்டா போன்ற உணவுகளின் விலைகளும் அதிகரிக்கலாம் எனவும் அசேல சம்பத் கூறியுள்ளார்.