யாழின் வீதியோர நிழல் தரு மரத் தெரிவில் மாற்றம் கோரும் மக்கள் (Photos)
யாழ்ப்பாணத்தின் பல வீதிகளின் ஓரங்கள் யாவும் நிழல் தரும் மரங்களை நாட்டி வளர்த்து வருகின்றனர். இலங்கையில் வீதியோரங்களில் மரங்களை நாட்டி வளர்ப்பது இயல்பானதாகும்.
வீதிகளை அமைக்கும் போதும் அதனை அகலமாக்கும் போதும் இயற்கையாகவே அந்த நிலங்களில் நின்ற மரங்களை வெட்டி அகற்றிவிட்டு வீதிகளை அமைத்த பின்னர் நிழலுக்காகவும் அழகுக்காகவும் மரங்களை புதிதாக நட்டு வளர்க்கின்றனர்.
யாழ்.மிருசுவில்லில் இருந்து சாவகச்சேரி வரை வீதியில் நிழல் தரு மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டு வருகின்றமையை உற்று நோக்கும் போது பல வினாக்கள் வழி சிந்தனை தூண்டப்படுவதனையும் பொருளாதார, கலாச்சார அடிப்படைகளில் அவை ஆச்சரியமூட்டும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதை இனம் காட்டுவதாகவும் சமூக மாற்றங்கள் தொடர்பாக ஆய்வில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மிருசுவில் முதல் சாவகச்சேரி வரை வீதியின் அமைவு
மிருசுவில் முதல் சாவகச்சேரி வரையான வீதியின் அமைவு இயற்கையோடு சமூகமயப்பட்டுள்ளது. புகையிரத பாதையையும் A9 பாதையும் அருகருகே கொண்டுள்ளதோடு இந்த இரு பாதைகளையும் தழுவியதாக இரு பக்கங்களிலும் மக்கள் குடியிருப்புக்கள் இருக்கின்றன.
பிரதான போக்குவரத்துப் பாதையான போதும் மக்கள் மத்தியில் அமைந்துள்ள இயற்கையான தாவரச்சூழலை கொண்டதுமான அமைப்பு முறையை கொண்டுள்ளது. புகையிரத பாதையைக்கும் A9 பாதைக்குள் இடையில் நிழலை விரும்பி நாட்டிய மரங்கள் இருக்கின்றன.
அவை வளர்ந்து நிழலை கொடுக்கும் போது அந்த அமைப்பியல் இன்னும் அதிகளவான இயற்கை பேரழகை கொடுக்கும் என்பது திண்ணம்.
வீதிகளின் அமைவு சூழலில் உள்ள தரையமைவோடு இசைந்து போவதால் இந்த சாதக நிலை மேலும் பொருத்தப்பாடான சூழலை தருகின்றது என வீதியோர மரநடுகைகளில் ஆர்வம் கொண்டு தன் பங்களிப்பை ஆற்றிவரும் தன்னார்வலர் ஒருவர் விபரித்தார்.
இது போல் ஏனைய இடங்களிலும் பொருத்தப்பாடான அமைவுகள் இருக்கின்றன என அவர் மேலும் குறிப்பிட்டார்.யாழ் கோட்டையின் சுற்றுவட்டப் பாதையிலும் பயணத்தை நயினாதீவுக்கு திருப்பி விடும் சந்தியிலும் நாட்டி வளர்க்கப்படும் நிழல் தரும் மரங்களை சுட்டிக்காட்டியமையும் குறிப்பிடத்தக்கது.
எழுதுமட்டுவாள் வீதியின் மரங்கள்
முகமாலை, எழுதுமட்டுவாள்,கொடிகாமம் ஆகிய கிராமங்களை ஊடறுத்துச் செல்லும் A9 வீதியும் அதனோடு இணைந்த புகையிரத பாதையிலும் நிழல் தரும் மரங்களை நாட்டி வளர்த்து வருகின்றனர்.
அவையும் வளர்ந்தேகி பெருமரங்களாகி நிழல் கொடுக்கும் போது யாழ்ப்பாணம் நோக்கிய பயணத்தில் இயற்கையோடு இணைந்து பயணப்படும் உணர்வை மக்கள் பெற்று இன்புறலாம் என சமூக விடய ஆய்வாளர்களால் எடுத்துரைக்கப்படுகின்றது.
அபிவிருத்தியோடு கூடிய சூழல்நேயத்தன்மையை பேணுவதில் வீதியோர மரங்களின் நடுகையும் அவை பேணப்படுவதும் பெரும் பங்களிப்பை நல்கும்.
எனினும் இந்த மர நடுகைகளை கூடிய கவனம் எடுத்து எதிர்கால திட்டமிடல்களோடு முன்னெடுக்க வேண்டும் என சுற்றுச்சூழலியலாளர்கள் சிலரிடம் கருத்துக் கேட்டு போது குறிப்பிட்டனர்.
அவர்கள் பல விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தார் என்பதும் உற்று நோக்க வேண்டிய விடயமாகும்.
மண்ணுக்கு புதிய மரங்களாக யாழில் நிழல் தரு மரங்கள்
நிழல்தரு மரங்களை தெரிவு செய்யும் போது அவை பிராந்திய பொருத்தப்பாட்டினை கொண்டிருக்க வேண்டும்.இல்லையெனில் அவற்றால் கிடைக்கும் பயன்களை விட தீமைகளே அதிகமாக இருக்கும்.
பிராந்தியத்திலுள்ள யாதேனுமொரு இடத்தில் இயற்கையாக வளராத மரங்களை புதிதாக கொண்டுவரும் போது அவை அவசியம் தேவைதானா என சிந்திக்க முற்பட்டு அவற்றை கொண்டுவராதிருக்கும் நோக்கோடு காரணங்களை ஆய்வு செய்யும் போது அவசியம் உணரப்படுமெனின் அவற்றை நிழல் மரங்களாக பயன்படுத்தலாம்.
அவ்வாறு அவற்றை பயன்படுத்துவதை விட வேறு சாதமான இயல்புகளோடு நிழலையும் தரக்கூடிய பிராந்திய மரங்கள் இருக்குமெனின் அவற்றை நாட்டுவதே பொருத்தமானதாக இருக்கும் என அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
யாழ்ப்பாணத்தின் தரையமைவு ஏனைய இடங்களை விட வித்தியாசமானது என்பதும் இங்கே நோக்க வேண்டும்.நிலத்தடியில் சுண்ணாம்புப் பாறைகளை கொண்ட நிலமாக அது இருக்கின்றது.வன்னி போல் கருங்கல் பாறைகள் யாழ்ப்பாணத்து நிலத்தில் இல்லை.
மேல்தட்டு புவியோட்டில் மண்ணின் ஆழம் அதிகமாயிருக்கும் சூழலிலும் மண்ணின் ஆழம் குறைவாக இருந்து அவை பாறைகளை கொண்டிருக்கும் போது மரங்கள் தொடர்பிலும் அவற்றின் வேர்கள் தொடர்பிலும் கவனம் எடுக்க வேண்டும்.
மரங்களுக்கு மரங்கள் அவற்றின் உடலால் வெவ்வேறு பதார்த்தங்களை சுரந்து புறச்சூழலுக்கு விடுகின்றன. வேர்களால் சுரக்கப்படும் பதார்த்தங்கள் நிலத்தடியில் ஏற்படுத்தும் மாற்றங்கள் பாறைகளையும் மண்ணின் இழையமைப்பையும் மாற்றாத வகையில் இருக்க வேண்டும். இந்த நிழல் தரும் மரங்கள் விருட்சங்களாகும் போது அவை ஆக்கிரமிப்பு போக்கினை காட்டாதிருக்கவும் வேண்டும்.
வன்னியில் பரவலாக காணப்படும் இரு தாவரங்களை சுட்டிக்காட்டல் பொருத்தமானதாகும்.மக்களால் காசு மரம் என அழைக்கப்படும் கொடித்தாவரமும் பன்னீர் மரம் என அழைக்கப்படும் மலைவேம்பு போல் உயர்ந்து வளர்ந்து வெண்ணிறப் பூக்களை பூக்கும் இரு மரங்களை அழகுக்காக நாட்டியிருந்தனர்.
நாட்டப்பட்டிருந்த இடங்களில் அவற்றின் வாழ்க்கை காலம் நீண்டு போனபோது அவை ஆக்கிரமிப்பு தாவரங்களாக மாற்றமடைந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இது போல் நிழலை முன்னுரிமைப்படுத்தி தெரிவு செய்யப்படும் தாவரங்களால் ஏற்படும் அச்சுறுத்தல் தொடர்பில் மக்களிடையேயும் மர நடுகைகளை ஊக்குவிக்கும் நபர்களிடையேயும் தெளிவற்ற நிலை இருப்பதனை இந்த கோணத்தில் மேற்கொண்ட கேள்விக்கனைகளிற்கான பதிலுரைப்புக்களிலிருந்து அறிய முடிந்திருந்தது.
வீதியோர மரங்களாக வேம்பும் மாவும் நல்ல விளைவுகளைத் தரும்
யாழ்ப்பாணம் முழுவதும் மண்ணோடும் மக்களோடும் இசைந்து வாழ்ந்து வளரக்கூடிய வேப்பமரங்கள் நன்கு நிழல் தந்து பயன் தரக்கூடியவை. வேப்பமர நிழலில் இருப்பது உடலுறுதியைத் தரும்.
வேப்பம் இலையும் வித்தும் நோயெதிர்ப்பை கொடுப்பதோடு விவசாயத்தில் களைக்கொல்லியாகவும் தானியங்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பதற்கும் உதவுகின்றது. நுளம்புகளை விரட்டுவதற்கு புகையூட்டும் பொருளாகவும் பயன்படுகிறது.
வேப்பம்பூ கொண்டு வடகம் செய்து உணவோடு உண்ணும் பாரம்பரியம் தமிழர்களுடையது.இத்தனை பயனுடைய வேம்ப மரத்திற்கு வீதியோர மரநடுகைகளில் முன்னுரிமை கொடுத்தால் மக்களுக்கு நிழலோடு அதிக பயன் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
வேம்பு யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய மரங்களில் ஒன்று என்றும் வேம்பை வீதியோர மரங்களாக நாட்டுதல் நலன் மிக்கது என்றும் யாழ்பபாண பாரம்பரியம் தொடர்பாக பேசவல்ல ஒருவர் குறிப்பிட்டார்.
வீதியோர மரங்களாக மக்கள் வாழிடங்களினூடாக செல்லும் பாதைகளில் மாமரங்களையும் தெரிவு செய்யலாம் என மாமர பயின்செய்கையாளர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.
மாமரங்களில் விழாட் பொருத்தப்பாடு கூடிய மரம்.நீண்ட கால தாவரமாக மாமரங்களுள் நல்ல குடையைமைப்பை பேணக்கூடியது விழாட் வகை மாமரங்கள்.
கறுத்தக்கொழம்பான், விழாட் மாமரங்களை நாட்டி பராமரிக்கும் போது நிழலோடு பழ உற்பத்தியும் சாத்தியமாகும்.யாழ்ப்பாணத்து கறுத்தக்கொழம்பான் பழத்திற்கு நல்ல சந்தை வாய்ப்புக்கள் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மாமரங்களை வீதியோர நிழல் தரு மரங்களாக நடுவதற்கு திட்டமிடும் போது வீதியோர பயிர்ச்செய்கை தொடர்பாகவும் வீதிகளின் ஒழுங்கு முறைகளையும் ஒருங்கிணைக்கக் கூடிய புதிய திட்டமிடல் ஒன்று அவசியமாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஆசிரியராக கடமையாற்றி தன் ஓய்வு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மாமரபயிர்சசெய்கையாளரான இந்த ஐயா "இப்போதெல்லாம் புதிய புதிய மாமர இனங்கள் எட்டிப்பார்க்கின்றன.
யாழ்ப்பாணத்தின் பாரம்பரியத்தை மாற்றியமைத்து விடுமோ என்ற அச்சம் தனக்கிருப்பதாகவும், நல்ல பாரம்பரியங்களை தொடர்ந்து பின்பற்றி பேணிப் பாதுகாத்தல் ஒன்றே ஈழத்தமிழர்களின் இருப்பை வலுவாக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
வீதியோர நிழல்தரு மரத்தெரிவு
எதிர்காலத்தில் வீதியோர நிழல் தரு மரங்களை நாட்ட முற்படும் போது பிராந்திய பொருத்தப்பாட்டையும் மக்கள் நலன் சார்ந்து ஒன்றுக்கு மேற்பட்ட பயன்களைத் தரக்கூடியதையும் கருதி தாவரங்களை தெரிந்தெடுத்தால் அது எதிர்காலத்தில் நிறைந்த பயனுடைய செயற்பாடாக அமையும்.
உரிய தரப்பினரும் ஈழத்தமிழ் இளையவர்களும் இது தொடர்பில் தகவல்களைத் தேடியறிந்து தெளிவுகளைப் பெறுதல் மூலம் எதிர்காலத்தில் இதனை சாத்தியமாக்கலாம்.