அம்பாறை மாவட்டத்தில் குடியிருப்புகளுக்குள் பிரவேசிக்கும் முதலைகளால் மக்கள் அச்சம்
அம்பாறை (Ampara) மாவட்டத்தில் அதிகளவிலான முதலைகள், ஆறுகளை விட்டு வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்வதால் பொதுமக்கள் அச்சத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இரவு நேரங்களில் அதிகமான முதலைகள் ஆற்றை விட்டு வெளியேறுவதாக மக்கள் கூறியுள்ளனர்.
இந்த மாவட்டத்தில் கிட்டங்கி, மாவடிப்பள்ளி, சின்ன முகத்துவாரம் மற்றும் கஞ்சி குடிச்சாறு உள்ளிட்ட இடங்களிலும் முதலை அச்சறுத்தல் தொடர்ந்து வருகின்றன.
மக்கள் கோரிக்கை
மேற்படி பகுதிகளில் உள்ள வாவிகள் மற்றும் குளங்களில் முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
மேலும், வயல் நிலங்கள் மற்றும் கால்வாய்களை அண்டிய பகுதிகளில் புல் மேயும் எருமை மாடுகள் முதலைகளின் இரைக்குள்ளாவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, முதலைகளின் நடமாட்டம் தொடர்பில் உரிய இடங்களில் அறிவுறுத்துதல்கள் மற்றும் எச்சரிக்கைப் பலகைகள் இதுவரையும் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.
இந்நிலையில், முதலை அபாயம் தெரியாமல் இப்பகுதியில் பயணிப்பது ஆபத்தானது என்பதால் இதை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்க
வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |