நிறுவன உரிமை விபரங்களை வெளியிட தவறினால் சிறை தண்டனை! விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கை
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் (Beneficial Ownership) தொடர்பான தகவல்களைச் சமர்ப்பிக்க தவறிய நிறுவனங்களுக்கு இலங்கை நிறுவன பதிவாளர் திணைக்களம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 21ஆம் திகதியுடன் நீடிக்கப்பட்ட காலக்கெடு நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை தகவல்களை சமர்ப்பிக்காத நிறுவனங்கள் உடனடியாக அவற்றை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
ஒக்டோபர் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிவிப்பில், சட்ட விதிமுறைகளை மீறி தொடர்ந்தும் இணங்கத்தவறும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நிறுவனங்கள் சட்டம் இல. 7 of 2007 மற்றும் 2025ஆம் ஆண்டின் திருத்தச் சட்டத்தின் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 10 இலட்சம் ரூபாய் அபராதம் அல்லது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
நிறுவனங்களின் இறுதி உரிமையையும் கட்டுப்பாட்டையும் கொண்டுள்ள தனிநபர்களை அடையாளம் காண்பதே இந்த உரிமை விபரங்களை வெளியிடுவதன் நோக்கமாகும்.
எனவே, பாதிக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களும் நிறுவனப் பதிவாளர் திணைக்களத்தின் Beneficial Ownership System ஊடாக நிலுவையிலுள்ள தகவல்களை உடனடியாகச் சமர்ப்பித்து சட்ட இணக்கத்தை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.