கடவுச்சீட்டு பிரச்சினை உள்ளிட்ட அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள்
எதிர்வரும் சனிக்கிழமை இலங்கைக்கு புதிய கடவுச்சீட்டுகள் கிடைக்கும் என்றும், அது ஒக்டோபர் 21ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படும் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இலத்திரனியல் கடவுச்சீட்டு முறையைச் சுற்றி தற்போது நிலவும் சட்டச் சிக்கல்கள் குறித்தும் பேசிய அமைச்சர், இந்த திட்டத்துக்கு கேள்விப்பத்திரங்கள் கோரப்படுவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றத்தால் தற்போது தடை உத்தரவு நடைமுறையில் உள்ளதாக விஜித ஹேரத் கூறியுள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கை
எனவே நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன் இந்த விடயம் மறுபரிசீலனை செய்யப்படும் என்று ஹேரத் கூறியுள்ளார்.
இலங்கைக்கு 750,000 கடவுச்சீட்டுகள் கிடைத்தாலும், விரைவில் அதன் கையிருப்பு தீர்ந்துவிடும் என்று தெரிவித்துள்ள அவர் மற்றொரு சாத்தியமான கடவுச்சீட்டு பற்றாக்குறையைத் தவிர்க்க, வழக்கமான கடவுச்சீட்டு கொள்முதல் செயல்முறையைத் ஆரம்பிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எரிபொருள் மானியம்
பொருளாதார நெருக்கடி காரணமாக கடற்றொழிலில் ஏற்பட்டுள்ள தாக்கங்களை குறைத்து அந்த இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கான நிகழ்ச்சித்திட்டம் எரிபொருள் விலை மிகவும் பெருமளவில் அதிகரித்தமை காரணமாக கடற்றொழிலில் துறையில் ஏற்படும் பாதகமான தாக்கத்துக்கு தீர்வு வழங்குவதற்கு அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2024.08.21 திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும், குறித்த தீர்மானம் இதுவரை அமுல்படுத்தப்படவில்லை. எனவே, மீனவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதனை குறிக்கோளாக கொண்டு 2024.10.01 திகதியிலிருந்து நடைமுறையாகும் வகையில் 06 மாத காலத்துக்கு பின்வரும் நிவாரணங்களை வழங்குவதற்காக விவசாய, காணி, கால்நடை வள, நீர்ப்பாசன, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
எரிபொருளாக டீசல் பெற்றுக்கொள்ளும் கடற்றொழில் கலங்களின் உரிமையாளர்கள் ஒரு லீற்றர் டீசலுக்கு 25 ரூபா பணம் கிடைக்கும் வகையில் ஒரு மாதத்துக்கு 300,000 ரூபா வரையான உச்ச எல்லைக்குள் “கடற்றொழில் துறையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டள்ளது.
தேசிய சுவடிகள் கூடம்
ஆவணக்காப்புத் தொடர்பான மேனிலைத்தரவு (Metadata) மற்றும் டிஜிட்டல் பாதுகாப்புக்கான Atom (Access to memory) மற்றும் Archivematica போன்ற திறந்த மூலாதார மென்பொருள் தொடர்பான நிபுணர்களை இணைத்துக் கொண்டு “இலங்கை தேசிய சுவடிகள் கூடத்தில் Atom (Access to memory) மற்றும் Archivematica போன்ற மென்பொருள் தளத்தை உருவாக்குவதற்காக” 7,000 யூரோக்கள் நன்கொடையை வழங்குவதற்கு ஆவணக் காப்பகங்களின் சர்வதேச பேரவையின் சர்வதேச ஆவணக்காப்பு அபிவிருத்திக்கான நிதியம் உடன்பாடு தெரிவித்துள்ளது.
தேசிய சுவடிகள்கூடத்தின் நம்பகமான டிஜிட்டல் களஞ்சியத்தை அமைப்பதற்காக தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள கருத்திட்டத்தின் கட்டம் – 01 இற்கான செலவின் ஒருபகுதியைப் பொறுப்பேற்பதற்காக குறித்த நன்கொடையைப் பயன்படுத்துவதற்காக ஆவணக்காப்பகங்களின் சர்வதேசப் பேரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த நன்கொடையைப் பெற்றுக் கொள்வதற்கான கருத்திட்ட சமவாயத்தை ஆவணக்காப்பகங்களின் சர்வதேச பேரவையுடன் கையொப்பமிடுவதற்கும் மற்றும் அதற்குரிய ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மருத்துவ வழங்கல்களுக்கான பெறுகை
இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கி உள்நாட்டு மருந்து உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்காக பின்னரான கொள்வனவு செய்தல் ஒப்பந்தப் பொறிமுறையின் கீழ் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக 2013.11.29 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்துடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ள உள்நாட்டு மருந்து உற்பத்திக் கம்பனிகளின் உற்பத்திகளுக்கு 15 ஆண்டுகளுக்கான பின்னரான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தால் வழங்கப்படும் முன்னுரிமையின் அடிப்படையில் குறித்த மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கும், சுகாதார அமைச்சுடன் உள்நாட்டு மருந்து உற்பத்தியாளர்களுக்கிடையில் மருந்துகள் விநியோகிப்பதற்கான பின்னரான ஒப்பந்தத்தை 10 ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தவும், 2018.10.02 அன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய, விநியோகிக்கப்படும் மருந்துகளின் விலையைத் தீர்மானிப்பதற்காக விலை நிர்ணயக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த மருந்துகளைக் கொள்வனவு செய்கின்ற முறைக்கமைய தற்போதுள்ள மருத்துவ விநியோகத் தேவையின் 20 சதவீதம் உள்ளடக்கப்படுவதுடன், குறித்த அளவை 40 சதவீதம் வரை அதிகரிப்பதற்கான இயலுமை காணப்படுவதாக அடையாளங் காணப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளுக்கான பாதுகாப்பு சேவை
சுகாதார அமைச்சின் கீழ் காணப்படுகின்ற மருத்துவமனைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கான பாதுகாப்பு சேவைகள் வழங்குவதற்காக மட்டுப்படுத்தப்பட்ட போட்டி விலைமுறி கோரல் முறைமையைப் பின்பற்றி, வரையறுக்கப்பட்ட றக்னா லங்கா பாதுகாப்புக் கம்பனி, வரையறுக்கப்பட்ட எல்.ஆர்.டீ.சீ.தனியார் கம்பனி மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கும், மத்திய மாகாண சபையின் கீழ் இயங்குகின்ற பொருளாதார அபிவிருத்தி நிறுவனம் மற்றும் வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்குகின்ற மனிதவன அபிவிருத்தி அதிகாரசபைக்கு குறித்த மாகாணங்களில் அமைந்துள்ள சுகாதார அமைச்சின் கீழ் காணப்படும் மருத்துவமனைகள் / நிறுவனங்களுக்கான விலைமுறி கோரப்பட்டுள்ளது.
அதற்கமைய, வரையறுக்கப்பட்ட எல்.ஆர்.டீ.சீ.சேவைகள் (தனியார்) கம்பனியால் அனைத்து மருத்துவமனைகளுக்கும், மத்திய மாகாண சபையின் கீழ் இயங்குகின்ற பிராந்திய பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தால் குறித்த மாகாணத்தில் அமைந்துள்ள சுகாதார அமைச்சின் கீழ் காணப்படும் மருத்துவமனைகளுக்கான விலைமுறி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரை மற்றும் பிரதமர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவைக் கருத்தில் கொண்டு, குறித்த பாதுகாப்பு சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் 2024.10.01 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் 06 மாத காலத்திற்கு வரையறுக்கப்பட்ட எல்.ஆர்.டீ.சீ.சேவைகள் (தனியார்) கம்பனிக்கு வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |