பாசிக்குடா “புளு பிளேக் பீச் வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்
பாசிக்குடா “புளு பிளேக் பீச் (Blue Flag Beach)” வேலைத்திட்டம் தொடர்பான மட்டக்களப்பு மாவட்ட கடற்கரை முகாமைத்துவக் குழுவின் இரண்டாவது கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளீதரன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்கிழமை (27.02.2024) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
அதற்கமைய, பாசிக்குடாக் கடற்கரையை “புளு பிளேக் பீச் (Blue Flag Beach)” ஆகத் தரமுயர்த்தும் வேலைத் திட்டம் தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
புளு பிளேக் பீச் தரச் சான்றிதழ்
சுற்றுலாத்துறை அமைச்சின் அனுசரணையில் மேற்கொள்ளப்படவுள்ள குறித்த திட்டத்திற்காக உணவட்டுன, பெந்தோட்டை, அருகம்பே மற்றும் பாசிக்குடா ஆகிய நான்கு கடற்கரைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
“புளு பிளேக் பீச் (Blue Flag Beach)” தரச் சான்றிதழ் டென்மார்க் நாட்டில் அமைந்துள்ள சுற்றாடல் கல்விக்கான மன்றம் (FEE) எனும் சர்வதேச நிறுவனத்தினால் சுற்றாடல் கல்வி மற்றும் தகவல், தரமான நீர், சுற்றாடல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் சேவை ஆகிய பிரதான நான்கு காரணிகளுடன் காணப்படும் கடற்கரைகளுக்கு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


