ஜனாதிபதி மாளிகை தோட்டத்தில் விருந்து
போராட்டத்தின் மூலம் கோட்டாபய ராஜபக்ச, வெளியேற்றப்பட்ட பின்னர், நேற்று இரவு, போராட்டக்காரர்கள், ஜனாதிபதி மாளிகையின் முன்வாயில் தோட்டத்தில் வெற்றிக்கொண்டாட்டத்தின் விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
முன்னதாக நேற்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை முற்றுகையிட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் தலைமையிலான போராட்டக்காரர்கள், பிற்பகல் 2 மணியளவில் மாளிகைக்குள் உள்நுழைந்தனர்.
பாதுகாப்பு தரப்பினரின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இரண்டு போராட்டக்காரர்கள், மாளிகைக்குள் பிரதான வாயிலின் ஊடாக ஏறினர்.
தடுக்காத பொலிஸார்! கொண்டாட்டத்தில் போராட்டக்காரர்கள்
இதன்போது அங்கிருந்த பொலிஸார் தடுக்காத நிலையில், ஏனைய போராட்டக்காரர்களும் வாயிலில் ஏறி ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்தனர்.
இதனையடுத்து போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கானோரும் மாளிகைக்குள் புகுந்து பல்வேறு இடங்களுக்கும் சென்றனர். அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதன்போது சிறப்பு அதிரடிப்படை அதிகாரியும், ஒரு அமைச்சர் பாதுகாப்புப் பிரிவு அதிகாரியும் செயலற்ற முறையில் இந்த சம்பவங்களை பார்த்துக் கொண்டிருந்தனர்.
பலர், மாளிகைத் தோட்டத்தில் மதிய உணவை பிரித்து சாப்பிட்டனர். சிறிது தூரத்தில், ஆர்ப்பாட்டக்காரர்கள்; ஜனாதிபதி செயலகத்திற்குள்ளும் பிரவேசித்தனர்.