நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்கும் ஜனாதிபதி: அரசியல் வட்டாரம் வெளியிட்ட தகவல்கள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்க திட்டமிட்டு உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
எதிர்வரும் ஜனவரி மாத நடுப்பகுதி அளவில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டால் நாடாளுமன்றின் செயற்குழுக்கள் அனைத்தும் இரத்தாகும் என்பதுடன் நாடாளுமன்றம் மீள ஜனாதிபதியினால் கூட்டப்பட்டதன் பின்னர் இந்த செயற்குழுக்கள் மீண்டும் புதிதாக செயற்படத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அரசியல் வட்டார தகவல்கள்
ஜனாதிபதியினால் நாடாளுமன்றை அதிகபட்சமாக 2 மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்படும் முடியும். ஜனாதிபதி நாடாளுமன்ற ஒத்திவைத்து மீளவும் நாடாளுமன்றம் அமர்வுகள் நடைபெறும் தினத்தை அறிவிக்க முடியும்.
மேலும் இந்த புதிய நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம் ஆகும் போது ஜனாதிபதி அக்கிராசன உரையை மேற்கொண்டு சம்பிரதாயபூர்வமாக அமர்வுகளை ஆரம்பித்து வைப்பார்.
தற்பொழுது கோப் குழுவின் தலைவராக செயல்பட்டு வரும் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவை அந்தப் பதவியில் இருந்து நீக்கும் நோக்கில் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்தி வைப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோப் குழுவின் தலைவர்
ஏனெனில் கோப் தலைவர் இலங்கை கிரிக்கெட் விவகாரத்தில் விசாரணை நடத்தி வருகின்றார்.
கிரிக்கெட் நிறுவனத்தின் திட்டமொன்றின் ஆலோசகராக பேராசிரியர் பண்டார கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே நிறுவனத்தின் சார்பில் பணியாற்றி வரும் ஒருவர் அந்த நிறுவனம் தொடர்பில் விசாரணை நடத்துவது பொருத்தமாகாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியிருந்தார்.
இதன் அடிப்படையில் ரஞ்சித் பண்டாரவை கோப் குழு தலைமைப் பதவியிலிருந்து நீக்கும் வகையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.